Home இந்தியா பீகார் நாடாளுமன்றத் தொகுதிகள்: மோடி – நிதிஷ் கூட்டணி 40 தொகுதிகளில் 39-இல் வெற்றி

பீகார் நாடாளுமன்றத் தொகுதிகள்: மோடி – நிதிஷ் கூட்டணி 40 தொகுதிகளில் 39-இல் வெற்றி

831
0
SHARE
Ad

பாட்னா – பிரம்மாண்டமான வெற்றியை இந்த முறை பாஜக பெறுவதற்கு உதவிய பல வட மாநிலங்களில் முக்கியமான மாநிலம் பீகார் ஆகும். இங்கு பாஜக, நிதிஷ்குமாரின் ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளின் கூட்டணி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளைக் கைப்பற்றியது.

பீகார் மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான லல்லு பிரசாத் யாதவ்வின் ராஷ்டிரிய ஜனதா தளம் எந்த ஒரு தொகுதியிலும் வெல்ல முடியாமல் படுமோசமாகத் தோல்வியடைந்தது.

காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.

#TamilSchoolmychoice

பீகார் மாநிலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்றத் தொகுதி பாட்னா சாஹிப் தொகுதியாகும். இந்தத் தொகுதியில் நடப்பு சட்டத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மீண்டும் போட்டியிட அவரை எதிர்த்து பிரபல நடிகர் சத்ருகன் சின்ஹா போட்டியிட்டார். நீண்ட காலமாக பாஜகவில் இருந்து அண்மையில் நரேந்திர மோடியின் எதிர்ப்பாளராக மாறிய சத்ருக்கன் சின்ஹா பாஜகவிலிருந்து விலகி காங்கிரசில் இணைந்தார். காங்கிரசும் அவருக்கு ரவிசங்கர் பிரசாத்தை எதிர்த்து நிற்கும் வண்ணம் பாட்னா சாஹிப் தொகுதியை ஒதுக்கியது.

எனினும் சத்ருக்கன் சின்ஹாவை இந்தத் தொகுதியில் 2 இலட்சத்து 80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் ரவிசங்கர் தோற்கடித்தார்.

பாஜக கூட்டணியில் பீகார் மாநிலத்தின் மற்றொரு முக்கியத் தலைவரான ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் இடம் பெற்று அந்தக் கட்சிக்கு 6 நாடாளுமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. 6 தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி வெற்றி பெற்றது. ராம்விலாஸ் பஸ்வானின் மகனும் ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.