திருவனந்தபுரம்: நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்குகள் நேற்று வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக கூட்டணி 300-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
ஆயினும், தென்னிந்தியாவில் பெரிய அளவில் பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை என்பதே உண்மை. கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளில் 19-இல் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இவர்களில் பத்து பேர் ஒரு இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இவர் 4.3 இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார்.
இடதுசாரி கூட்டணியின் தோல்வி குறித்து பேசிய சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன், அக்கட்சியின் தோல்வி எதிர்பாராதது என்றார்.
இதே போல் பாஜகவிற்கு எதிரான சிபிஎம்மின் பிரச்சார வியூகம், காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
தங்கள் கட்சியின் அடைந்த தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று கூறினார். இதற்கிடையே, மக்கள் சபரிமலை கோயில் விவகாரத்தில் பினராய் விஜயன் முற்போக்குதனமான செயலால்தான் கடவுள் அவரை தண்டித்துள்ளார் என கருத்து பதிவிட்டு வருகின்றனர்.