சென்னை: பண அரசியலுக்கு இடையில், இவ்வளவு பெரிய இலக்கை தங்கள் கட்சி எட்டி உள்ளதைக் கண்டு தாம் மன நிறைவு அடைவதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி முதல் கடந்த 19-ஆம் தேதி வரை மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. மேலும், தமிழகத்தில் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதனையடுத்து நேற்று வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், பெரும்பாலான இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. தமிழகத்தைப் பொறுத்தவரை திமுக 38 மக்களவை தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதோடு, 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 13 இடங்களில் வாகை சூடியது. அதிமுக ஒன்பது இடங்களில் வெற்றி பெற்று 2-வது இடம் பிடித்தது. புதிதாக களம் கண்ட கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் எவ்விடத்திலும் இடம்பெறவில்லை என்றாலும், கணிசமான வாக்குகள் பெற்று 3-வது இடம் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“எங்களை நம்பி நேர்மையாக வாக்களித்து எங்களிடமிருந்து எங்கள் கடமையை தவிர வேறு எதையும் எதிர்பாராமல், எங்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், வாக்குகளை பெறுவதற்கு நேர்மையான முறையில் முயற்சித்து வாக்குகளை பெற்றிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை வெற்றியாளர்களாகவே பார்க்கிறேன்” என்று கமல்ஹாசன் கூறினார்.
தமிழகத்தில் பாஜக வரவில்லை என்பது தமிழக மக்கள் கொடுத்துள்ள தீர்ப்பு என்று அவர் கூறினார். வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு நிகராக தமிழகத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கமல்ஹாசன் பிரதமர் மோடிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.