கோலாலம்பூர் – சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் (படம்) மீதான பாலியல் தொடர்பான புகார்களை காவல் துறையே விசாரிக்க வழிவிட பிகேஆர் கட்சி முடிவெடுத்துள்ளது. கேசவனுக்கு எதிராக அவரது முன்னாள் உதவியாளர் செய்துள்ள புகார்கள் கடுமையானவை எனக் கருதுவதால் இதனைக் காவல் துறையே விசாரிக்கட்டும் என அந்தக் கட்சி கூறியது.
இருதரப்புகளும் காவல் துறையில் புகார்கள் செய்திருப்பதால், இதுகுறித்து விசாரணைகளைத் தொடக்கியுள்ள காவல்துறையின் முடிவுக்கே விட்டு விடுவோம் என பிகேஆர் இன்று ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
எனினும், கேசவன் மீதான புகார்கள் உண்மையென நிரூபிக்கப்பட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிகேஆர் உறுதி கூறியது.
கேசவன் மீது அவரது முன்னாள் உதவியாளர் ஒருவர் பாலியல் தொல்லை புகார்கள் தெரிவித்திருந்தார். ஆனால் கேசவன் அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்.