Home வணிகம்/தொழில் நுட்பம் சிங்கப்பூர் அமரர் நா கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

சிங்கப்பூர் அமரர் நா கோவிந்தசாமியின் 20ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி

1925
0
SHARE
Ad

சிங்கப்பூர் – தமிழ் மொழியை இணையத்தில் முன்னெடுப்பதில் பல்லாண்டுகளுக்கு முன்னரே மிகத் தீவிரமாக  பாடுபட்டவர்களில் ஒருவர் சிங்கப்பூரைச் சேர்ந்த நா. கோவிந்தசாமி. நாகோ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட இவரின் தமிழ்ப் பணிகளை நினைவு கூரும் வகையில், அவரது 20-ஆம் ஆண்டு நினைவு நாளை சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் தமிழ்ப் பிரிவும், சிங்கப்பூர் வாசகர் வட்டமும் இணைந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 26-ஆம் நாள் மாலை தேசிய நூலகத்தின் தி போட் (The POD) எனும் அரங்கில் நடத்தின.

சீதாலட்சுமி உரை

சீதாலெட்சுமியின் உரை

இந்த நிகழ்ச்சியில் தேசியக் கல்விக்கழகத்தைச் சேர்ந்த முனைவர் சீதாலட்சுமி, பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான கனகலதா, இணைய முன்னோடி முனைவர் டான் டின் வீ, மலேசிய தொழில்நுட்ப வல்லுநர் முத்து நெடுமாறன் ஆகியோர் நினைவஞ்சலி உரைகள் நிகழ்த்தினர்.

“தமிழ்க்கல்வி: மெளன வாசிப்பிலிருந்து இன்று வரை” என்ற தலைப்பில் திரு  நா கோவிந்தசாமியின் கற்றல் கற்பித்தல் சார்ந்த ஆசிரியவியல்  அணுகுறைகளை எடுத்துக்கூறினார், முனைவர் சீதா லட்சுமி. உரக்க வாசிப்பு முதன்மையாக இருந்த நிலையை மாற்றி, மெளன வாசிப்பின் முக்கியத்துவத்தைக் கல்வியாளர்கள் அறியும் வகையில் வாசிப்பு மாதிரியை உருவாக்கிய கோவிந்தசாமி அதை எவ்வாறு சிங்கப்பூரில் தமிழ்க்கல்வித்துறையில் பரவலாக்கினார் என்றும் எடுத்துரைத்தார்.

டான் டின் வீ ஆற்றிய உரை

“நாகோ ஒரு முன்னோடி” என்ற தலைப்பில் உரையாற்றிய முனைவர் டான் டின் வீ, 1990-களின் தொடக்கத்தில் சிங்கப்பூரில் இணையம் அறிமுகமாகிய தருணத்தில் சீனத்தையும் தமிழையும் இணையத்தில் ஏற்றுவது எவ்வாறு என்று தாம் முயன்று கொண்டிருந்தபோது அதற்குத் தோள் கொடுத்தவர் திரு நாகோ என்று விளக்கினார்.

கனகலதாவின் உரை

அவரை அடுத்து பேசிய கனகலதா, “நா.கோவிந்தசாமியை  நினைவுகூர்வது என்பது சுதந்திர சிங்கப்பூரின் தமிழிலக்கியத்தொடக்கத்தை நினைவுகூர்வது ஆகும்” என்று குறிப்பிட்டு,  “1965ல்,19 வயது இளைஞனாக  எழுத்துலகில் அறிமுகமானநா.கோவின் வாழ்க்கையையும் சிங்கப்பூரின் வரலாற்றையும்நாட்டின் வளர்ச்சியில் மொழிஇலக்கியச் சூழல்களில் ஏற்பட்டமாற்றங்களையும் ஒப்புநோக்கிப் பார்க்கமுடியும்” என்று பல விளக்கங்களை எடுத்துக் கூறினார். 

மலேசியாவின் முத்து நெடுமாறன் உரை

#TamilSchoolmychoice

“தமிழ்த் தொழில் நுட்பம்: ‘கணியனி’லிருந்து இன்றுவரை” என்ற தலைப்பில் மலேசியாவின் கணினித் தொழில்நுட்ப வல்லுநர் முத்து நெடுமாறன் உரையாற்றினார்.

நாகோவை முதன் முதலாக 1986-ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் சந்தித்ததை நினைவு கூர்ந்த முத்து நெடுமாறன், தொடர்ந்து அவரைப் பலமுறை சந்தித்ததாகவும் அந்தச் சந்திப்புகளின் வழி தங்களுக்கிடையில் பல பயனான கருத்துப் பரிமாற்றங்கள் செய்து கொள்ளப்பட்டன என்றும் தெரிவித்தார்.

தங்களுக்கிடையில் தமிழ்க் கணினித் துறை தொடர்பிலும், தமிழைக் கணினியில் முன்னெடுப்பது குறித்தும் பல கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவையெல்லாம் தமிழ் மொழியை கணினித் துறையில் எவ்வாறு மேம்படுத்துவது என்பதில்தான் இருந்தனவே அன்றி, தங்களுக்கிடையில் நல்ல நட்பும், கருத்துப் பரிமாற்றங்களும் தொடர்ந்தன என முத்து நெடுமாறன் தெரிவித்தார்.

நா.கோவிந்தசாமியின் குடும்பத்தினர்

கணியன் விசைப்பலகையை அவர் வடிவமைத்த விதம், அதற்காக அவர் மேற்கொண்ட ஆய்வுகள் தரமானதாக இருந்ததைச் சுட்டிக்காட்டிய முத்து நெடுமாறன், விசைப்பலகை அமைப்புக்கு அப்பால் தமிழில் தொழில்நுட்ப மேம்பாடுகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் என்றும் அவற்றை தொழில்நுட்ப வல்லுனர்கள் மட்டுமல்லாமல் அனைத்துத் துறையைச் சார்ந்தவர்களும் மேற்கொள்ளவேண்டும் என்றும் முத்து நெடுமாறன் கேட்டுக் கொண்டார்.

உரைகளுக்குப்பின், சிங்கப்பூர் கொள்கை ஆய்வுக் கழகத்தின் அருண் மகிழ்நன் தலைமையில் கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் நாகோவின் துணைவியாரும் மகனும் கலந்து சிறப்பித்தனர். சிராங்கூன் டைம்ஸ் பத்திரிக்கையின் ‘நாகோ சிறப்பு இதழ்’ ஒன்றும் இந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.

அந்தச் சிறப்பிதழின் இணைய வடிவத்தைக் கீழே உள்ள இணைப்பில் காணலாம்:

https://www.singaporetamil.org/in-memory-of-mr-naa-govindasamy