Home கலை உலகம் திரைவிமர்சனம்: ‘என்ஜிகே’ – செல்வராகவனின் குழப்பலும், சொதப்பலும் இணைந்த கலவை!

திரைவிமர்சனம்: ‘என்ஜிகே’ – செல்வராகவனின் குழப்பலும், சொதப்பலும் இணைந்த கலவை!

437
0
SHARE

கோலாலம்பூர் – கடந்த 3 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்து – செல்வராகவன் இயக்கத்தில் சூர்யாவா? – என்ற பெரும் எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டு, வெளிவந்திருக்கும் ‘என்ஜிகே – நந்தகோபாலன் குமரன்’ படம் பெரும் ஏமாற்றத்தைத் தந்திருக்கிறது.

இதற்கு முன் பார்த்த எத்தனையோ அரசியல் படங்களின் சம்பவங்கள், காட்சிகள், நடப்புகள் என அவற்றையெல்லால் மீண்டும் ஒரு முறை பார்ப்பதுபோல் எடுத்திருக்கிறார் செல்வராகவன்.

அவரது பாணியும் படத்தில் வெளிப்படவில்லை. அவர் கட்டமைத்த கதைக்குள் நுழைந்து படத்தைக் காப்பாற்ற சூர்யாவும் தனது நடிப்பால் எப்படியெல்லாமோ போராடிப் பார்க்கிறார் – ஆனால் முடியவில்லை.

கதையில் ஏகப்பட்ட குளறுபடிகள், சொதப்பல்கள்! கால ஓட்டத்தில் படக் கதையை இடையிடையே மாற்றிக் கொண்டே எடுத்திருக்கிறார்கள் என்பது மட்டும் அப்பட்டமாகத் தெரிகிறது.

படத்தின் கதை இலக்கில்லாமல் எங்கெங்கோ செல்கிறது.

படத்தைப் பார்க்கும் நேரத்தில் கே.பாலசந்தரின் அந்தக் கால ‘அச்சமில்லை அச்சமில்லை’, அமைதிப் படை, நோட்டா, முதல்வன், அண்மையில் வெளிவந்த ‘எல்கேஜி’ என பல தமிழ்ப் படங்கள் – அதன் காட்சிகள் – நினைவுக்கு வந்து போகின்றன.

கதை – திரைக்கதை

வில்லிப்புத்தூரில் எம்.டெக். மற்றும் பிஎச்டி என மெத்தப் படித்த – கல்யாணமான – ஆர்கானிக் விவசாயம் எனப்படும் இயற்கை விவசாயம் பார்க்கும் – நந்தகோபாலனாக வரும் சூர்யா, உள்ளூர் சட்டமன்ற உறுப்பினரின் ஆதிக்கத்தாலும், அழிச்சாட்டியத்தாலும் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகிறார் என்பதிலிருந்து தொடங்கும் படம் பின்னர் அவர் சூழ்நிலையால் அரசியலுக்குள் தள்ளப்படுகிறார் என்பதைக் காட்டுகிறது.

ஒருகட்டத்தில் அந்த மோசமான அரசியலில் அடிமட்டத்திலிருந்து தொடங்கி தானும் அதற்குள் மூழ்கி எப்படித் தனது அறிவாற்றலாலும், போராட்டத்தாலும் முதலமைச்சர் வரை உயர்கிறார் என்ஜிகே என்ற நந்தகோபாலன் குமரன் என முடிகிறது படம்.

ஆனால், திரைக்கதையிலும், புதிதாகவோ, புதுமையாகவோ எதுவுமில்லை. சுவாரசியமில்லாத காட்சிகள். ஆரம்பத்தில் சாதாரண ஹீரோவாகக் கவரும் சூர்யா போகப் போக தனது உடல் மொழியை மாற்றிக் கொண்டு கோமாளித்தனமாக பேசுவது சகிக்கவில்லை.

இடையிடையே காதில் பூச்சூற்றல்கள்! துப்பாக்கியால் சுட்டும், தண்ணீருக்குள் மூழ்கியும் சாகாமல் உயிரோடு அப்படியே வருகிறார் சூர்யா.

படத்தில் ஆறுதலான ஒரே அம்சம் இரண்டு கதாநாயகிகள். சூர்யாவின் மனைவியாக வரும் சாய்பல்லவி, காதலியாக வரும் ராகுல்பிரித் சிங் இருவரும் கவர்கிறார்கள். முதலமைச்சரின் ஆலோசகராக, மக்கள் தொடர்பு வியூகம் வகுக்கும் வானதி என்ற நவீனப் பெண்ணின் கதாபாத்திரத்தில் பாந்தமாகப் பொருந்துகிறார் ராகுல் பிரித் சிங்.

மனைவியாக வரும் சாய்பல்லவி கணவன் மேல் வீசும் வாசனைத் திரவியத்தை (பெர்பியூம்) வைத்து, அவனுக்கு இன்னொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கண்டுபிடிப்பதும், பின்னர் ஒரு கட்டத்தில் ராகுல்பிரித் சிங்கைச் சந்திக்கும்போது, அந்த வாசனையை வைத்தே அவரை அடையாளம் காண்பதும், வித்தியாசமான காட்சிகள்.

அதே போல சாய்பல்லவியும், ராகுல் பிரித்தும் மறைமுகமாகப் பேசிக் கொள்ளும் வசனங்களிலும் சுவாரசியங்கள் நிறைய. இந்தக் காட்சிகளைத் தவிர்த்து மற்றவை எல்லாமே வழக்கமான, போரடிக்கும் காட்சிகள்.

அதிலும், மேடையில் அளவுக்கதிகமாக இலக்கு இல்லாமல் சூர்யா பேசிக் கொண்டே இருப்பதும் போரடிப்பு.

கலக்கும் இளவரசு

படத்தில் இரசிக்கும்படியான இன்னொரு நடிப்பு என்றால், அது எம்எல்ஏ-வாக வரும் இளவரசுவின் நடிப்புதான். வில்லத்தனமாக அவர் அட்டகாசம் செய்வதும், சூர்யாவை வேலை வாங்குவதும் பின்னர் கட்சித் தலைமையைப் பார்க்கச் செல்லும்போது மட்டும் ஒரேயடியாகப் பம்முவதும் – இரசிக்கும்படி செய்திருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை கவரும் அளவுக்குப் பாடல்கள் கவரவில்லை.

படத்தின் இறுதியில் – சந்தையில் நடைபெறும் உச்சகட்ட சண்டைக் காட்சியை அப்படியே மொத்தமாகத் தூக்கி விட்டார்கள் மலேசியத் தணிக்கையாளர்கள். திடீரென எல்லோரும் இரத்தக் கறைகளோடும், சாய்பல்லவி துப்பாக்கிச் சூட்டோடும் வர – அடுத்த காட்சி நகர்கிறது.

மொத்தத்தில் செல்வராகவனின் இரசிகர்களாகப் படம் பார்க்கச் சென்றவர்களுக்கும் ஏமாற்றம்! சூர்யாவுக்காக படம் பார்க்கச் சென்றவர்களுக்கும் ஏமாற்றம்!

சமூக ஊடகங்களிலும் படத்தைக் கழுவி ஊற்றிக் கொண்டு இருக்கிறார்கள்!

எனவே, படத்தைப் பார்த்து விட்டுத் திட்டுவதற்குப் பதிலாக தவிர்ப்பது நலம்!

-இரா.முத்தரசன்

Comments