Home நாடு தமிழர்களின் பெருமைகளை எடுத்துக் காட்டிய ‘சமுத்திர புத்திரன்’

தமிழர்களின் பெருமைகளை எடுத்துக் காட்டிய ‘சமுத்திர புத்திரன்’

911
0
SHARE

கோலாலம்பூர் – கடந்த மே 18-ஆம் திகதி, சனிக்கிழமை, மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையும் இந்திய ஆய்வியல் துறையும் இணைந்து மலாயாப் பல்கலைக்கழகத்தில் நடத்திய ‘சமுத்திர புத்திரன்’ என்ற நிகழ்ச்சி தமிழர்களின் பழம் பெருமைகளையும் அவர்களின் ஆளுமை, ஆட்சி, பிரமாண்டம், கட்டுமானம், வணிகம், நாகரிகம் என அனைத்து அம்சங்களிலும் முன்னோடியாகத் திகழ்ந்த மூத்தக் குடியான தமிழரின் வரலாற்றினை அழகாக வகுத்துக் கூறும் வகையில் நடத்தப்பட்டது.

மூவேந்தர்கள் தொடங்கி, மலேசியா வரை கால் பதித்த தமிழினத்தைப் பற்றி பல சான்றுகளுடன் அனைத்திலும் முன்னோடியாக விளங்கிய தமிழர்களின் வரலாற்றை மிக எளிமையாகவும் சிறப்பாகவும் வழிநடத்தினார் ஜே.கே.விக்கி (படம்).

அவரது இந்த முயற்சிக்கு மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டது.

தமிழர்கள் வணிகத்தில் கொடி கட்டிப் பறந்ததை மறுக்கவும் முடியாது, மறக்கவும் இயலாது. அன்று நம் முன்னோர்கள் விதைத்த விதைகள் மரங்களாக செழுத்திருந்த காலம் மருவி, நாம் மறந்த காலம்தான் இப்பொழுது. அவ்வற்புத விதைகளை மண்ணோடு மண் ஆகாமல் மீண்டும் அவ்விதைகளைத் தூண்டித் துளிர்விடச் செய்ய இச்சொற்பொழிவு உறுதி புரிந்தது என்றால் அது மிகையாகாது. சுடர் விளக்காயினும் தூண்டுகோள் தேவை என்பதற்கொப்ப வளர்ந்து வரும் நம் இனம் எந்த துறையிலும் பின் தங்காமல் இருக்க அச்சொற்பொழிவு தூண்டுகோளாக அமைந்தது.

“சமுத்திர புத்திரன்” என்ற சொற்பொழிவுக்கு மாணவர்கள் தந்த ஒத்துழைப்பும் ஆதரவும் அளப்பரியது. சுமார் 400 பேர் இச்சொற்பொழிவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதற்கேற்ப நமது நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகவும் உறுதுணையாகவும் விளங்கவிருக்கும் மாணவர்கள் நமது முன்னோர்கள் கால் பதித்த வழித்தடங்களை வழிகாட்டியாகக் கொண்டு வாழ்வில் சிறக்க இம்மாதிரியான சொற்பொழிவு துணைப்புரியும்.

தாய் தந்தையின் பெயர் அறிவது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம்தான் நமது வரலாற்றினை அறிவதும். சிறப்புமிக்க வரலாற்றினை வகுத்துக் கூற இது போன்ற சொற்பொழிவுகள் மிக அவசியம். இதன் மூலம் பெறப்படும் தகவல்களும் வழிகாட்டல்களும் அனைவருக்கும் மிக நன்மையாக இருக்கும். மாணவர்கள் மட்டுமின்றி பொது மக்களுக்கும் இம்மாதிரியான சொற்பொழிவு சிறப்புமிக்கதாக அமையும்.

தொடர்ந்து அடுத்தடுத்து நடத்தப்படவிருக்கும் சமுத்திர புத்திரன் சொற்பொழிவுகளுக்கு  பொது மக்கள் நீங்கள் தரும் ஆதரவே இந்நிகழ்ச்சிக்கு அடித்தளமாக அமையும். சுழன்று வரும் உலகமயச் சுழற்சியின் தேசிய நீரோடையில் நமது சமுதாயம் பின் தங்காமல் இருக்க, இச்சொற்பொழிவு மிக பயனுள்ளதாக அமையும்.

எனவே, தொடர்நது வரும் சொற்பொழிவுகள் பொதுமக்கள் வருகையாலும் ஆதரவாலும் மேலும் சிறப்பு பெறும் என உறுதியாக நம்புகிறோம். பல மொழிகளுடன் போட்டிப் போட்டுக் கொண்டு பீடு நடைப் போட்டு வரும் தன் நிகர் அற்ற தமிழ் மொழியினை மாணவர்களிடையே காப்பதற்கும், வளர்ப்பதற்கும் தமிழ்ப் பேரவை போன்ற பல்கலைக்கழக இயக்கங்கள் காக்கும் கரங்களாக செயல்படுகின்றன.

அவ்வகையில், மலாயாப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவை தனது உன்னத பணியினை 60 ஆண்டுக் காலமாக மிகச் சிறப்பாக தொடர்ந்து வந்து வைர விழாவினைக் கொண்டாடவிருக்கிறது என்பது மலேசிய இந்தியர்களின் பெருமிதத்தின் அடையாளம் என்றால் அது மிகையாகது.

தொடர்ந்து, தம்பின் நெகிரி செம்பிலானில் வரும் 9-ஆம் திகதி ஜூன் மாதம் மாலை மணி 6 முதல் 9 வரை நடைபெறும் சமுத்திர புத்திரன் இலவச நிகழ்ச்சியில் இணைந்து பல வரலாற்று செய்திகளை அறியத் தவறாதீர்கள் என நெகிரி செம்பிலான் வாழ் இந்தியர்களை ஏற்பாட்டாளர்கள் அழைக்கின்றனர்.

மேல் விபரங்களுக்கு 011-36177640 அல்லது 012-2311049 என்ற கைத் தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.

Comments