மலேசியாவில் உள்ளூர் தயாரிப்பாக உருவாகியிருக்கும் “பூச்சாண்டி” என்ற திரைப்படம் கடந்த ஜனவரி 27-ஆம் தேதி முதல் திரையரங்குகளில் திரையீடு கண்டிருக்கிறது.
இத்திரைப்படத்தை டிரியூம் ஸ்டுடியோ (TRIUM STUDIO PVT LTD) நிறுவனத்தின் எஸ். எண்டி (முனியாண்டி – ANDY) தயாரிக்க, ஜே. கே. விக்கி (விக்னேஸ்வரன் கலியபெருமாள்) இயக்கியிருக்கிறார்.
திகில் – மர்மம் நிறைந்த இத்திரைப்படத்தின் கதை சில நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அவர்களின் கதையோடு, இறுதியில் பழங்கால சோழர்களின் பூஜாங் பள்ளத்தாக்கு குறித்த சில அம்சங்களையும் சாமர்த்தியமாகப் புகுத்தி ஒரு வித்தியாசமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் ஜே.கே.விக்கி.
இந்தப் படத்தின் இயக்குநர் ஜே.கே.விக்கி, “சமுத்திர புத்திரன்” என்ற தலைப்பில் சோழர்களின் கடார வருகை குறித்தும், அவர்களின் கடல் பயணங்கள் குறித்தும் நாடு முழுவதும் காணொலி-உரை நிகழ்ச்சிகள் நடத்தியவராவார். அதன் காரணமாகவோ என்னவோ, சோழர்களின் பூஜாங் பள்ளத்தாக்கு – கடாரம் – குறித்த சில அம்சங்களை படத்தில் சேர்த்திருக்கிறார்.
பூச்சாண்டி கதைச்சுருக்கம்
ஒரு திகில் கதை பத்திரிகையாளரான இந்தியாவை சேர்ந்த முருகன் என்பவர் (ஆர்.ஜே. ரமணா), தனித்துவமான மற்றும் அமானுஷ்ய கதைகளை சேகரிக்க மலேசியா வருகிறார். தன்னுடைய வேலைக்கான கதை தேடலாகத் தொடங்கிய முருகனின் பயணம் ஷங்கரைச் சந்திக்கும் போது மர்மமாக மாறுகிறது. அதன் பின்னே நடக்கும் சுவாரசியமான சம்பவங்களே ‘பூச்சாண்டி’.
லோகன், தினேஸ் சாரதி, கணேசன் மனோகரன், ஹம்சனி பெருமாள் மற்றும் இந்தியாவின் முன்னனி வானொலி நிலையமான மிர்ச்சி.எஃ.எம் (MIRCHI.FM) சேர்ந்த அறிவிப்பாளார் ரமணா ஆகியோர் இத்திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். அனைவரும் மிகவும் எதார்த்தமான நடிப்பைக் கொடுத்து நம்மை அசத்தியிருக்கின்றனர்.
இத்திரைப்படத்தின் படத்தொகுப்பு, ஓளிப்பதிவு மற்றும் இசை அனைத்தும் மிகவும் நேர்த்தியான வகையில் கையாளப்பட்டிருக்கிறது. முக்கியமாக இத்திரைப்படத்தின் பின்னணி இசையும் ஓலிப்பதிவும் அபாரம்.
இத்திரைப்படத்தின் குறை என்று கூறினால் முதல் 20 நிமிடங்கள் சுவாரசியமாக இருந்தாலும் கதை ஒரே இடத்தை சுற்றி நகர்வதால், திரைக்கதை எதை நோக்கி செல்கிறது என்கிற சிறு குழப்பம் தோன்றுகிறது. ஆனால் அதன் பின் சில திருப்பங்களுக்கு பிறகு கதை சூடு பிடிக்கத் தொடங்கி விடுகிறது.
சமீபத்தில் திரையரங்கில் வெளியீடு கண்ட மலேசியத் திரைப்படங்களில் “பூச்சாண்டி” வித்தியாசமான கதைக்களம், மாறுபட்ட திரைக்கதை, போன்ற அம்சங்களால் தனித்து விளங்குகிறது என்று கூறினால் அது மிகையாகாது.