2018ஆம் ஆண்டு!
14ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்த காலகட்டம். எதிர்கட்சிகளின் கூட்டணிக்குத் தலைமையேற்றிருந்தார் துன் மகாதீர். அப்போதையப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக். இருவரும் பரபரப்பாக மோதிக் கொண்டே அடுத்தடுத்து அரசியல் காய்களை நகர்த்தினர்.
பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமோ சிறையில் இருந்தார்.
மகாதீரின் பெஜுவாங் கட்சிப் பதிவுக்கு சங்கப் பதிவிலாகா அனுமதி மறுத்தது. பக்காத்தான் கூட்டணிக்கும் – அதற்கான பொது சின்னத்திற்கும் அதே சங்கப் பதிவிலாகா அனுமதி மறுத்தது. இவையிரண்டும், நஜிப்பின் வியூகக் காய் நகர்த்தல்களாகப் பார்க்கப்பட்டது.
எல்லாருமே அதிர்ந்து போனார்கள். குறிப்பாக, ஜசெகவில் சலசலப்புகள் எழுந்தன. எப்போதுமே சீன சமூக வாக்காளர்களுக்கு நன்கு அறிமுகமான ராக்கெட் சின்னத்தில் தான் ஜசெக எப்போதும்-எல்லாப் பொதுத் தேர்தல்களிலும்- போட்டியிடும்.
அப்பேர்ப்பட்ட ஜசெகவே விட்டுக் கொடுத்து பிகேஆர் சின்னத்தில் போட்டியிட முன்வந்தது.
அந்த 14-வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் கோட்டைகள் தகர்க்கப்பட்டன. பக்கத்தான் பெரும்பான்மைத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியை அமைத்தது.
ஜோகூர் தேர்தலில் நிலைமை மாற்றம்
இப்போது ஜோகூர் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் நிலைமை தலைகீழாகிவிட்டது.
மொத்தமுள்ள 56 தொகுதிகளில், 20 தொகுதிகளில் பிகேஆர். தனது சொந்த சின்னத்தில் போட்டியிடும் என்று அன்வார் இப்ராஹிம் அறிவித்திருக்கின்றார்.
அந்த இரண்டு கட்சிகளும் தங்களின் சொந்த சின்னத்தில் போட்டியிடுவோம் என அறிவித்திருந்தால் கூட அதிலுள்ள நியாயத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.
ஆனால், பிகேஆர் சொந்த சின்னத்திலும் மற்ற இரண்டு கட்சிகள் பக்காத்தான் ஹராப்பான் சின்னத்தில் போட்டியிடுவது என்பது அந்த கூட்டணி கோட்பாட்டையே – அதன் மீதான நம்பிக்கைகையையே சிதைப்பதாக – அமைந்திருக்கிறது.
கூட்டணியின் மீதும் அதன் சின்னத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத மூன்று கட்சிகளின் கலவைதான் பக்கத்தான் என்ற தவறான தோற்றத்தை இந்த முடிவு ஏற்படுத்தியிருக்கிறது.
ஒன்று, பிகேஆர் சின்னத்தில் போட்டியிட மற்ற கட்சிகள் முன்வரவேண்டும். அல்லது பக்கத்தான் சின்னத்தில் போட்டியிட அனைத்து கட்சிகளும் முடிவெடுக்க வேண்டும்.
அல்லது மூன்றவது வியூகமாக ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாக அவரவர் சொந்த சின்னத்தில் போட்டியிட வேண்டும்.
அவ்வாறு செய்யாமல் எடுத்த எடுப்பிலேயே பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் வெவ்வேறு சின்னங்களில் போட்டியிட்டுத் தங்களிடையே எழுந்திருக்கும் முரண்பாடுகளை வெட்ட வெளிச்சமாக்கியிருக்கின்றன.
மூடா கட்சிக்கு இடமில்லையா?
ஆனால், அதற்குள்ளாகவே – மூடா கட்சிக்கு தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றனவா என்பது தெரிவிக்கப்படாமலேயே – பக்கத்தான் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்திருப்பது இன்னொரு பின்னடைவாகும்.
மூடா கட்சிக்கு இன்னும் எங்களின் கதவுகள் திறந்திருக்கின்றன என்ற சமாதானக் கொடியையும் இன்னொரு புறத்தில் பக்காத்தான் கூட்டணி காட்டியிருக்கிறது.
இன்றைய அரசியல் நிதர்சனம் – 18+ வயது வாக்காளர்களிடையே மூடா கட்சி மிகுந்த பிரபல்யம் கொண்டிருக்கிறது – என்பதை அனைவரும் உணர வேண்டும்.
மூடாவை இணைத்துக் கொள்வது பக்கத்தான் கூட்டணிக்கு கூடுதல் பலமே தவிர, பலவீனமல்ல!
மூடாவுடனான அரசியல் நிலைப்பாட்டையும் முன்கூட்டியே அறிவிக்காமல் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை அவசரம் அவசரமாக அறிவித்திருப்பது சரியான அரசியல் வியூகமாகத் தெரியவில்லை.
புதிய வியூகம், பக்கத்தான் கூட்டணிக்கு வெற்றியைத் தருமா?
முடிவு என்னவாயிற்று என்பது நமக்குத் தெரிந்ததுதான். ஒரு தொகுதியில் கூட பிகேஆர் வெல்ல முடியவில்லை.
அதற்குக் காரணம் 2018 தேர்தலில் பெரும்பாலான வாக்காளர்கள் தேர்ந்தெடுத்த பிகேஆர் சின்னத்தை நாம் பயன்படுத்தாததுதான் என அந்த கட்சியின் தலைமைத்துவம் கருதுவது போல் தெரிகிறது.
இதையெல்லாம் உணர்ந்துதானோ என்னவோ, ஜோகூர் தேர்தலில் ஒரு புதிய வியூகத்தை பக்கத்தான் செயல்படுத்த முனைந்துள்ளது.
இந்த புதிய வியூகம் வெற்றி பெறுமா என்பதை தேர்தல் முடிவுகள்தான் நமக்கு எடுத்துக்காட்டும்.
பிகேஆர் போட்டியிடும் தொகுதிகளில் அந்த கட்சி வெற்றி பெற்றால் அதன் மூலம் பிகேஆர் கட்சிக்கு ஜோகூர் மாநிலத்தில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை கணிக்க முடியும்.
அதேவேளையில், எஞ்சிய 36 தொகுதிகளில் குறிப்பாக, ஜசெக போட்டியிடும் தொகுதிகளில் பக்கத்தான் சின்னத்திற்கான ஆதரவு எப்படி இருக்கிறது என்பதையும் தேர்தல் முடிவுகள் காட்டும்.
ஆக, இந்த புதிய வியூகத்தினால் பக்கத்தான் கூட்டணி கட்சிகளிடையே கூடுதல் தொகுதிகளை வெல்வதற்கான வாய்ப்பும் ஏற்படலாம்.
எனவே, பிகேஆர் சொந்த சின்னத்தில் போட்டியிடுவது பலரும் கூறுவதுபோல் முரண்பாடான முடிவு என ஒரேயடியாக நாம் புறக்கணித்துவிட முடியாது. இதுவே, பக்காத்தான் கூட்டணி கணிசமானத் தொகுதிகளை வெல்வதற்கான வியூகமாகவும் அமையக் கூடும்.
அதேவேளையில் ஒரு பக்கம் பிகேஆர் சின்னம், இன்னொரு பக்கம் பக்கத்தான் சின்னம் என இந்த மூன்று கட்சிகளின் கூட்டணி ஏற்படுத்தி இருக்கும் குழப்பத்தால், ஜோகூர் தேர்தலில், மலாக்கா போன்று மோசமான தொகுதியை பக்கத்தான் சந்திக்கும் அவல நிலையும் ஏற்படலாம்.
-இரா.முத்தரசன்