வாஷிங்டன்: 2019-ஆம் ஆண்டுக்கான ஸ்கிரிப்ட்ஸ் தேசிய ஸ்பெல்லிங் பி போட்டியில் இம்முறை ஏழு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவர்களும், ஒரு அமெரிக்க மாணவியும் 50,000 அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை வென்றுள்ளனர்.
கடந்த 94 ஆண்டுக் கால வரலாற்றில் இதுவே முதல் முறையாக இரண்டு போட்டியாளர்களுக்கு மேல் முதல் பரிசினை வென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
ரிஷிக் காந்தாஸ்ரி, 13, கலிபோர்னியா; ஷாகேத் சுந்தர், 13, மேரிலாந்து; நியூ ஜெர்சியின் ஷிருதிகா பேடி, 13; சோஹும் சுக்ஷங்கார், 13, டெக்சாஸ்; அபிஜேய் கோடாலி, 12, டெக்சாஸ்; ரோஹன் ராஜா, 13, டெக்சாஸ்; கிறிஸ்டோபர் செராவோ, 13, நியூ ஜெர்சி; மற்றும் எரின் ஹோவர்ட், 14, அலபாமா ஆகியோர் இணை வெற்றியாளர்களாக பெயரிடப்பட்டனர்.
ஒவ்வொருவரும் தலா 50,000 அமெரிக்க டாலர் பரிசைப் பெற்றுள்ளனர்.
சுமார் 565 போட்டியாளர்களுடன் தொடங்கிய இப்போட்டியில் அமெரிக்கா, கனடா, கானா, மற்றும் ஜாமைக்கா ஆகிய நாடுகளிலிருந்து 7 முதல் 14 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டு இந்திய அமெரிக்க பெண்ணான அனன்யா வினய் என்பவர் இப்பட்டத்தை வென்றார். 2014 முதல் 2016-ஆம் ஆண்டுகளில், இப்போட்டி இணை வெற்றியாளர்களைச் சந்திதுள்ளது.