Home நாடு ஒருமைப்பாட்டிற்கு வலுசேர்க்கும் வண்ணம் கொண்டாடுவோம் – வேதமூர்த்தியின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

ஒருமைப்பாட்டிற்கு வலுசேர்க்கும் வண்ணம் கொண்டாடுவோம் – வேதமூர்த்தியின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

953
0
SHARE
Ad

புத்ராஜெயா –  நோன்புத் திருநாளைக் கொண்டாடும் மலேசிய மக்கள் அனைவருக்கும் பிரதமர் துறை அமைச்சகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக பொன்.வேதமுர்த்தி (படம்) தெரிவித்துள்ளார்.

மலேசியத் திருநாட்டின் கூட்டு சமுதாயத்தை பிணைத்திருக்கும் கயிறுகளைப் போன்றவை பண்டிகைகள் ஆகும். அதனால்தான், எந்தப் பண்டிகையாக இருந்தாலும் அனைத்து மக்களும் இனம், மொழி, சமயம் கடந்து ஒன்றாகக் கொண்டாடி ஒருமைப்பாட்டை வளர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் என இன்று செவ்வாய்க்கிழமை விடுத்த அறிக்கை ஒன்றில் வேதமூர்த்தி குறிப்பிட்டார்.

“அந்த வகையில் தற்பொழுது நோன்புத் திருநாள் கொண்டாட்டம் நம்மையெல்லாம் சூழ்ந்துள்ளது. உலகெங்கும் வாழும் இஸ்லாமிய மக்கள் ஒரு மாதம் (ரமலான்) முழுவதும் நோன்பிருந்து, ஷவ்வால் மாதம் பிறக்கின்ற இவ்வேளையில் நோன்புத் திருநாளைக் கொண்டாடுகின்றனர். இந்த நோன்பு காலத்தில் பசித்திருந்து, பிறர் துன்பம் உணர்ந்து, நன்னெறிச் சிந்தனைக்கு முன்னுரிமை அளித்து, அதிக நேரத்தை இறை வணக்கத்திற்காக ஒதுக்கி, முடிந்தவரை நலிந்தோருக்கு உதவிக் கரம் நீட்டி மாந்த நேயத்தை வளர்க்கும் விழாவாக இந்த நோன்புத் திருநாள் மலர்ந்துள்ளது” என்றும் வேதமூர்த்தி மேலும் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“இந்த நோன்புப் பண்டிகையை சிக்கனமாகவும் அதேவேளை சிறப்பாகவும் கொண்டாடி மகிழ வேண்டும். அத்துடன், மற்ற இன மக்களையும் அண்டை அயலாரையும் இணைத்துக் கொண்டு நாட்டு ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் வலுசேர்க்கும்படி இத்திருநாளை அனுசரிக்கும்படி அனைவரையும் கேட்டுக் கொள்ளும் அதேவேளை, விழாக் காலத்தில் சொந்த ஊர்களுக்கு செல்லும்போதும் திரும்பும் பொழுதும் போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளும்படி நாட்டு மக்கள் அனைவரையும் வேண்டுகிறேன்” என்றும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான பொன். வேதமூர்த்தி தனது நோன்புத் திருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.