Home நாடு மித்ரா தலைமை இயக்குநர் இலட்சுமணன் பதவி விலகுவதை வேதமூர்த்தி உறுதிப்படுத்தினார்!

மித்ரா தலைமை இயக்குநர் இலட்சுமணன் பதவி விலகுவதை வேதமூர்த்தி உறுதிப்படுத்தினார்!

1138
0
SHARE
Ad

புத்ரா ஜெயா – இந்திய சமுதாயத்தின் மறுசீரமைப்புக்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட செடிக் என்ற அமைப்பு பின்னர் மித்ராவாக உருமாற்றம் கண்டு அதன் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்ட அரசு அதிகாரியான இலட்சுமணன் பதவி விலகுவதை பிரதமர் துறை அமைச்சரும் மித்ரா இலாகாவுக்கு பொறுப்பு அமைச்சருமான பொன் வேதமூர்த்தி அறிக்கை ஒன்றின் வழி உறுதிப்படுத்தியுள்ளார்.

“மித்ரா தலைமை இயக்குநர் எஸ்.இலட்சுமணன் சண்முகம் மித்ராவிலிருந்து விலகிக் கொள்ளும் தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளார் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். மலேசிய இந்திய சமுதாயத்தின் அளவுக்கதிகமான எதிர்பார்ப்புகள் காரணமாக மித்ரா மீது ஏகப்பட்ட அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.மித்ராவுடனான தனது சேவைக் காலத்தை குறுகிய காலத்திற்குள்ளேயே நிறைவு செய்ய தனது சொந்த காரணங்களுக்காகவும், தொழில் காரணங்களுக்காகவும் அவர் முடிவெடுத்துள்ளார். அவரது முடிவை மதித்து ஏற்றுக் கொள்கிறேன்” என ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கை ஒன்றில் வேதமூர்த்தி தெரிவித்தார்.

“மலேசிய இந்திய சமுதாயத்திற்காக நம்பிக்கைக் கூட்டணி (பக்காத்தான் ஹரப்பான்) வகுத்த திட்டங்களை செயல்படுத்த மித்ராவில் பணியாற்றிய காலகட்டத்தில் இலட்சுமணன் எனக்கு பெருமளவில் துணைபுரிந்தார். அவர் உண்மையாகவும், கடப்பாடுடனும் மிகக் கடுமையாக உழைத்த ஒரு சிறந்த அரசு அதிகாரியாவார். நேர்மையாகவும், உண்மையாகவும் அவர் வழங்கிய அவரது பங்களிப்புக்கு எனது நன்றியை இந்த வேளையில் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் வேதமூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்தார்.