Home நாடு லத்தீஃபா கோயா நியமனம் – வழக்கறிஞர் மன்றம் அதிருப்தி

லத்தீஃபா கோயா நியமனம் – வழக்கறிஞர் மன்றம் அதிருப்தி

759
0
SHARE
Ad

கோலாலம்பூர் – வழக்கறிஞர் லத்தீஃபா கோயா ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து மலேசிய வழக்கறிஞர் மன்றம் தனது அதிருப்தியையும் கவலையையும் தெரிவித்துள்ளது.

லத்தீஃபா கோயா நியமனம் செய்யப்பட்ட விதம் குறித்தும் அவர் அந்தப் பொறுப்புக்குத் தகுதியானவர்தானா என்பது குறித்தும் வழக்கறிஞர் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஊழல் தடுப்பு ஆணையத் தலைவரின் நியமனம் தொடர்பில் ஏன் நாடாளுமன்றச் சிறப்புக் குழுவின் ஆலோசனை பெறப்படவில்லை என்பதற்கான நியாயமான காரணங்கள் வழங்கப்படவில்லை என வழக்கறிஞர் மன்றத்தின் தலைவர் அப்துல் பாரிட் அப்துல் கபூர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

வெளிப்படைத் தன்மை, மக்களுக்கு முழுமையான தகவல்கள் வழங்கும் கடப்பாடு, நேர்மை, சிறந்த நிர்வாகம் ஆகிய அம்சங்களைப் பின்பற்றுவோம் என சூளுரைத்த நடப்பு அரசாங்கம் அதனைப் பின்பற்றத் தவறி விட்டது என்பதை இந்த முடிவு காட்டுவதாகவும் அவர் கூறினார்.

நடப்பு நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் இனியும் தனது தேர்தல் கொள்கை அறிக்கையைப் பின்பற்றத் தேவையில்லை என்று கூறிக் கொண்டிருக்க முடியாது, காரணம் அந்தத் தேர்தல் கொள்கை அறிக்கையின் அம்சங்களைப் பின்பற்றித்தான் மக்கள் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தனர் என்றும் அப்துல் பாரிட் இன்று வியாழக்கிழமை விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

“நாடாளுமன்ற சிறப்புக் குழுவுக்கு சட்டரீதியான அங்கீகாரம் இல்லை என்ற போதிலும் தேர்தல் கொள்கை அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளின்படி, ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைவரின் நியமனம் போன்ற முக்கிய அரசாங்கப் பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுபவர்களின் நியமனம் வெளிப்படைத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதும் அரசாங்கத்தின் அதிகாரங்கள் வரம்பு மீறாமல் இருக்க ஒரு கவனிப்பாக இருக்க வேண்டும் என்பதும்தான் எங்களின் நிலைப்பாடு” எனவும் அப்துல் பாரிட் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

லத்தீஃபா கோயா மனித உரிமை வழக்குகளிலும், மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்திருக்கிறார் என்றாலும் அவர் நீண்ட காலமாக பிகேஆர் கட்சியில் ஈடுபட்டு பல முக்கியப் பதவிகளை வகித்து வந்திருக்கிறார் என்பதால், அவரது நியமனம் பாரபட்சமானது, முரண்பாடான கொள்கைகளைக் கொண்டது, எனவே அவர் தன்னிச்சையாக நடுநிலையோடு செயல்படுவாரா என்ற கேள்வியும் எழுகிறது எனவும் அப்துல் பாரிட் கூறியிருக்கிறார்.