சென்னை – தமிழகத் தலைநகர் சென்னைக்கு வருகை தந்திருக்கும் மஇகா தேசியத் தலைவரும், நாடாளுமன்ற மேலவையின் தலைவருமான டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையில் மஇகா குழுவினர் மரியாதை நிமித்தம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
விக்னேஸ்வரனுடன் சென்றிருந்த மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனும் ஸ்டாலினுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அண்மையில் நடைபெற்ற இந்தியப் பொதுத் தேர்தலில் திமுக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றிருப்பதற்கும் ஸ்டாலினுக்கு அவர்கள் வாழ்த்துகள் தெரிவித்துக் கொண்டனர்.
மஇகா கெடா மாநிலத் தலைவரும், செனட்டருமான டத்தோ ஆனந்தனும் இந்தச் சந்திப்பின் போது உடனிருந்தார். மேலும் ஜோகூர் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் ரவின்குமார் கிருஷ்ணசாமியும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.
ஸ்டாலினுடனான சந்திப்பு குறித்து கருத்துரைத்த மஇகா துணைத் தலைவர் சரவணன், “மஇகாவுக்கும், திமுகவுக்கும் இடையிலான நீண்ட கால உறவுகளையும் தொடர்புகளையும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையிலும், தொடர்ந்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் வகையிலும் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. தொடர்ந்து தமிழக, மலேசிய நல்லுறவுக்கு பாடுபடும் வகையிலும், திமுகவுக்கும் மஇகாவுக்கும் இடையில் இருந்து வரும் நல்லுறவுகள் தொடரும் வகையிலும் இருதரப்புக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.அதேவேளையில் கடந்த காலங்களில் திமுக தலைவர் கலைஞர் மு.கருணாநிதி ஆற்றிய தமிழ் பணிகளுக்கும் மஇகா குழுவினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்” என்று கூறினார்.
மஇகா குழுவினருக்கும் ஸ்டாலினுக்கும் இடையிலான சந்திப்பின் படக் காட்சிகளை இங்கே காணலாம்: