கோத்தா பாரு: கிளந்தான், குவா மூசாங் வட்டாரத்தில் உள்ள கோல கோ கிராமத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார பிரச்னை காரணமாகவே பூர்வகுடியினர் 14 பேர் மரணமடைந்துள்ளனர் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்தார்.
நோய்த் தொற்று மற்றும் நிமோனியா காய்ச்சல் காரணமாக கடந்த மே 2-ஆம் நாள் முதல் ஜூன் 9 ஞாயிற்றுக்கிழமை வரை இங்கு 14 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்த 14 பேரில் இருவர் மட்டுமே நோய்த் தொற்று காரணமாக இறக்க நேரிட்டது என்று சம்பந்தப்பட்டவர்களின் மீது நடத்தப்பட்ட உடற்கூறு ஆய்வின்வழி தெரிய வந்துள்ளது. எஞ்சியவர்களின் உடல்கள் கிளந்தான் – பகாங் மாநிலங்களின் எல்லையை ஒட்டிய காட்டுப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டன.
சம்பந்தப்பட்ட பூர்வகுடி கிராமம் மிகவும் உட்புற காட்டுப் பகுதியில் அமைந்திருப்பதால், மே 2-ஆம் நாள் முதல் இறக்க நேரிட்ட பன்னிருவர் குறித்த தகவல் கிராமத் தலைவருக்கோ அல்லது காவல் துறையினருக்கோ உடனுக்குடன் தெரியாமல் போய்விட்டதாக இது குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசியபோது அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக மாநில நோய்க் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இருந்து முழு விளக்கத்தைப் பெற்ற அமைச்சர், இந்த மரணங்களுக்கான சரியான காரணம் குறித்த விசாரணை முழு வீச்சில் காவல் துறையினராலும் மருத்துவக் குழுவினராலும் ஒருசேர நடத்தப்படுகிறது என்றார்.
“சம்பந்தப்பட்ட பூர்வகுடி கிராமத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சிக்கல் காரணமாக இதுவரை 83 பேருக்கு மருத்துவம் அளிக்கப்பட்ட வேளையில், 37 பேர் வெளி நோயாளியாக சிகிச்சை பெற்றனர். இவர்களில் 36 வயது பெண்ணும் 3 வயது குழந்தையும் ஆபத்தான கட்டத்தில் இருக்கின்றனர். இன்று ஞாயிற்றுக்கிழமை இறந்த இருவரில் ஒருவர், கோத்தா பாரு ராஜா பெரம்புவான் ஜைனாப் II மருத்துவமனையில் சுவாசப் பிரச்னை காரணமாக காலையில் இறந்தார்”.
இதற்கிடையில் யாரும் இது குறித்து தவறான தகவலை பரிமாறிக் கொள்ள வேண்டாம் என்று தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத் துறை அமைச்சருமான வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.
இந்தச் சந்திப்பின்போது மாநில சுகாதார இயக்குநர் டாக்டர் ஜைனி உசேனும் உடன் இருந்தார். முன்னதாக, கோல கோ கிராமத்திற்கு வருகை மேற்கொண்ட அமைச்சர், சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரையும் சந்தித்து முழு விவரத்தையும் கேட்டறிந்தார்.