கோலாலம்பூர்: குவா மூசாங்கில் அமைந்துள்ள காம்போங் கோல கோவில் ஏற்பட்ட மரண சம்பவத்திற்கு நீர் மாசுபாடு காரணம் எனக் கண்ணறியப்பட்டால் அதற்கு காரணமாவர்களுக்கு எதிராக உறுதியாக கடினமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரையிலும், இக்கிராமத்தில் 14 பேர் கடந்த மாதம் முதல் மரணமுற்று வந்துள்ளதை பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி உறுதி செய்துள்ளார்.
“ஒராங் அஸ்லியின் நீர் குளம் மாசுபட்டுள்ளதாகக் கூறப்படுவதை அரசாங்கம் முழுமையாக விசாரிக்கும். நீர் ஆதாரத்தின் மாசுபாட்டுக்கு காரணமானவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படுவர்” என அசிசா ஓர் அறிக்கையின் மூலம் குறிப்பிட்டிருந்தார்.
அதே நேரத்தில், அப்பகுதியில் நடத்தப்படும் சுரங்கப்பணி மற்றும் மரக்குற்றிகள் நடவடிக்கைகள் சுற்றுப்புற நடைமுறைகளை உட்படுத்தி செயல்படுத்தப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும் என அசிசா கூறினார்.
முன்னதாக மாநில நோய்க் கட்டுப்பாட்டு அதிகாரியிடம் இருந்து முழு விளக்கத்தைப் பெற்ற அமைச்சர் பொன். வேதமூர்த்தி, இந்த மரணங்களுக்கான சரியான காரணம் குறித்த விசாரணை முழு வீச்சில் காவல் துறையினராலும் மருத்துவக் குழுவினராலும் ஒருசேர நடத்தப்படுகிறது எனக் கூறியிருந்தார்.