இஸ்லாமாபாட்: பாகிஸ்தானில் ஊழல் மற்றும் வங்கி மோசடி வழக்கில் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. போலியான வங்கி கணக்குகளை தொடங்கியதாக சர்தாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் முன்னாள் அதிபரான ஆசிப் அலி சர்தாரி மற்றும் அவரது சகோதரி ஆகியோர் 15 கோடி ரூபாய் பணத்தை போலி வங்கி கணக்குகளை ஆரம்பித்து மாற்றியதாக புகார் எழுந்தது. இது குறித்து அந்நாட்டின் ஊழல் எதிர்ப்பு அமைப்பு விசாரணை நடத்தி வந்தது.
பாகிஸ்தானின் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் இந்த விசாரணை நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் சர்தாரி கேட்ட முன் ஜாமீனை அளிப்பதற்கு இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம் இரத்து செய்திருந்தது. இதனையடுத்து அவரை கைது செய்ய கைது ஆணையை தேசிய ஊழல் தடுப்பு அமைப்பு அனுப்பியிருந்தது.
இந்நிலையில் சர்தாரி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் அவரது சகோதரி பர்யால் கைது செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.