Home இந்தியா ஜாகிர் நாயக்கை நாடுகடத்த அதிகாரபூர்வ விண்ணப்பம் – இந்தியா சமர்ப்பித்தது

ஜாகிர் நாயக்கை நாடுகடத்த அதிகாரபூர்வ விண்ணப்பம் – இந்தியா சமர்ப்பித்தது

1197
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் தஞ்சமடைந்திருப்பதும், அவருக்கும் இங்கே நிரந்தர வசிப்பிடத் தகுதி வழங்கப்பட்டிருப்பதும் அனைவரும் அறிந்த ஒன்று.

தற்போது, இந்திய அரசாங்கம் அவரை இங்கிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்த முறையான அதிகாரபூர்வ விண்ணப்பம் ஒன்றை சமர்ப்பித்திருப்பதாக இந்திய வெளியுறவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜாகிர் நாயக்கிற்கு நியாயமான நீதி விசாரணை கிடைக்காது எனக் கருதினால் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப மறுக்கும் உரிமை மலேசியாவுக்கு இருக்கிறது என மகாதீர் அறிவித்த இரண்டு நாட்களில் இந்தியா ஜாகிர் நாயக்கை நாடு கடத்தும் விண்ணப்பத்தைச் சமர்ப்பித்துள்ளது.

#TamilSchoolmychoice

“இந்த விவகாரத்தை மலேசியாவுடன் நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். பல நாடுகளுடன் நாங்கள் நாடுகடத்தும் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளோம். அதன்படி வெற்றிகரமாக பலரை இந்தியாவுக்கு மீட்டுக் கொண்டு வந்திருக்கிறோம். இந்தியாவின் நீதித் துறை விசாரணை மிக நியாயமான ஒன்று என்பதை அனைத்துலகமும் அறியும்” என இன்று புதன்கிழமை புதுடில்லியில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தபோது இந்திய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் ரவிஷ்குமார் தெரிவித்தார்.

கள்ளப்பண பரிமாற்றம் தொடர்பில் 115 மில்லியன் ரிங்கிட் வரையில் ஜாகிர் நாயக் குற்றச்சாட்டுகளை இந்தியாவில் எதிர்நோக்கி இருக்கிறார்.

எதிர்வரும் ஜூன் 16-ஆம் தேதி மும்பை நீதிமன்றத்தில் ஜாகிர் நாயக் மீதான வழக்கு விசாரணைக்கு வரும்போது அவருக்கு எதிராக பிணையில் வெளிவரமுடியாத கைது ஆணை பிறப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதைத் தொடர்ந்து இண்டர்போல் எனப்படும் அனைத்துலக காவல்துறையின் உதவியோடு அவர் மீது சிவப்பு அடையாளக் குறியீடு பிறப்பிக்கப்படும். இதன் அடிப்படையில் மலேசியா அவரைத் தடுத்து வைத்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.