Home வணிகம்/தொழில் நுட்பம் “தமிழ் எழுத்துரு வடிவமைப்பு” குறித்து கோலாலம்பூரில் முத்து நெடுமாறன் உரை

“தமிழ் எழுத்துரு வடிவமைப்பு” குறித்து கோலாலம்பூரில் முத்து நெடுமாறன் உரை

1680
0
SHARE
Ad
முத்து நெடுமாறன் – கோப்புப் படம்

கோலாலம்பூர் – மலேசியாவின் பிரபல கணினித் துறை நிபுணரான முத்து நெடுமாறன் கோலாலம்பூரில் இயங்கிவரும் மலேசிய வடிவமைப்பு காப்பகமும் (Malaysia Design Archive) ஹூருப் (Huruf) எனப்படும் எழுத்துரு தொடர்பான அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சியில் “தமிழ் எழுத்துருக்களைக் கண்டுபிடித்தல்: அன்றாடத் தொழில்நுட்பப் பயன்பாட்டில் மொழியின் இணைப்பு” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார்.

இந்த உரை நாளை சனிக்கிழமை ஜூன் 15-ஆம் தேதி பிற்பகல் 3.00 மணி தொடங்கி மாலை 5.00 மணிவரை கீழ்க்காணும் முகவரியில் நடைபெறும்:

Malaysia Design Archive @ The Zhongshan Building

#TamilSchoolmychoice

2nd Floor, Lot 84, Jalan Rotan

Kampung Attap, Kuala Lumpur

மலேசியாவில் தமிழ் எழுத்துரு

1980-ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவிலும், அனைத்துலக அளவிலும் தமிழ் அச்சகத் துறை (பிரிண்ட்) அச்சடிப்பதற்கும், விளம்பரங்கள், சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளிலும் பிரசுரிக்கவும் எடுத்துக் காட்டவும், அச்சுக் கோர்ப்பு முறைக்கு முழுக்க முழுக்க உலோகத்திலான எழுத்துரு வடிவங்களையே நம்பியிருந்தது.

அந்தக் கால அச்சுக் கோர்ப்பு அறையைக் காட்டும் படம்

அதிலும் இதுபோன்ற எழுத்துருக்களுக்கான வடிவங்களின் எண்ணிக்கை குறைந்த அளவிலேயே இருந்தன. ஒரு குறிப்பிட்ட எழுத்துருக்கான எண்ணிக்கையும் குறைந்த அளவிலேயே இருந்தன. இதுபோன்ற காரணங்களால் அன்றைய நாளில் ஒரு பக்கத்தில் தமிழ் அச்சடிப்பதற்கு, மலாய் அல்லது ஆங்கில மொழியில் அச்சடிப்பதற்கான செலவை விட ஐந்து மடங்கு கூடுதலாகப் பிடித்தது.

தினசரி செய்தித் தாள்களையும், நூல்களையும், வார, மாத இதழ்களையும் அச்சடிப்பது என்பது அந்நாளில் ஒரு சிரமமான, பிரம்மாண்டமான பணியாகப் பார்க்கப்பட்டது. இவற்றுக்கான அடிப்படை மூலாதாரங்கள், பொருட்கள், கருவிகள் என்பதற்கான தேவை ஒருபுறமிருக்க, இந்தத் துறையில் அழுக்குப் படிந்த கரங்களோடு வேலை செய்வதற்கு முன்வரத் தயாராக இருந்த பணியாட்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருந்தது.

அச்சடிப்பதற்கு தேவைப்பட்ட கால அவகாசம், அதற்கு ஏற்பட்ட செலவினங்கள் ஆகியவை வார, மாத இதழ்களையும், பத்திரிக்கைகளையும் வெளிக் கொணர்வதற்கு முக்கியத் தடைக்கற்களாக அமைந்தன.

இத்தகைய சூழ்நிலைகள் காலப்போக்கில் எவ்வாறு மாற்றம் கண்டன என்பது குறித்தும், அந்த மாற்றத்திற்கு தாமே காரணமாக அமைந்த காலச் சூழல்கள் எவ்வாறு அமைந்தது என்பது குறித்தும் தனது உரை மையம் கொண்டிருக்கும் என முத்து நெடுமாறன் செல்லியலுக்குத் தெரிவித்தார்.

ஒரு பதின்ம வயது இளைஞராக 1970-ஆம் ஆண்டுகளில் கிள்ளானில் தான் படித்த தனது பள்ளி நிகழ்ச்சி ஒன்றுக்காக மும்மொழிகளில் ஒரு பத்திரிக்கையைத் தயாரிக்க முற்பட்டபோது, எதிர்நோக்கிய பிரச்சனைகள், சவால்கள், சிரமங்கள் முத்து நெடுமாறனின் மனதில் ஆழமாகப் பதிய இதனை சரிசெய்வது எப்படி என்ற சிந்தனையும், ஆய்வும் அப்போது முதல் தொடங்கி பின்னர் அவரது கல்லூரி நாட்கள் வரை தொடர்ந்தது.

பொறியியல் துறையில் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்று வேலை தேடுவதற்கு முன்பே இந்த ‘அச்சடிப்பு’ பிரச்சனைகளுக்கான தீர்வுகளைத் தேடி தனது மூளை தொழில்நுட்ப ரீதியாகத் தீவிரமாக இயங்கத் தொடங்கி விட்டது என்கிறார் முத்து நெடுமாறன்.

ஆனால், 30 ஆண்டுகளுக்குப் பின்னர் எழுத்துருக்களுக்கான வடிவமைப்பு, மொழிகளுக்கான கணினி உள்ளீடு தொழில்நுட்பம் ஆகியவையே கால ஓட்டத்தில் தனது நிரந்தர ஆர்வமாகவும், தொழிலாகவும் மாறும் என்பதையோ, தனது அந்த ஆர்வத்தைத் தொடர நிறைய வருமானத்தைத் தரக்கூடிய அனைத்துலக நிறுவனத்தின் உயர் பதவியையே விட்டு விலகும் சூழ்நிலை அமையும் என்றோ அப்போதெல்லாம் முத்து நெடுமாறன் கொஞ்சம் கூட நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால், கால ஓட்டத்தில் அதுதான் நடந்தது!

அதுமட்டுமல்ல! இந்தத் துறைகளில் சிறப்பாக தனது உழைப்பை வழங்கியதன் காரணமாக அனைத்துலக அளவில் முத்து நெடுமாறன் கவனத்தையும் ஈர்த்தார். அங்கீகாரங்களையும் பெற்றார்.

இந்தத் துறைகளில் தனது பங்கெடுப்பு குறித்து பல்வேறு கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் அனைத்துலக அளவில் உரையாற்றி தனது அனுபவங்களையும் தான் கற்றுக் கொண்டதையும் பகிர்ந்து வருகிறார்.

அந்த வரிசையில்தான் நாளை கோலாலம்பூரில் நடைபெறும் உரையையும் வழங்குகிறார்.

தமிழ் மட்டுமின்றி மற்ற மொழிகளும் அச்சடிப்பு, இணையத் தளம், திறன்பேசிகளில் குறுந்தகவல் உள்ளீடு ஆகிய அம்சங்களில் நிகழ்த்தியிருக்கும் புரட்சிகரமான மாற்றங்கள் குறித்தும் இந்தத் துறைகளில் தனது அனுபவப் பயணத்தின் சுவாரசியமானப் பக்கங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாகவும் முத்து நெடுமாறனின் உரை அமைந்திருக்கும்.

இலவசமாக வழங்கப்படும் இந்த உரை நிகழ்ச்சியில் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு:

https://www.facebook.com/malaysiadesignarchive/?epa=SEARCH_BOX