கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான இருபத்து ஏழாவது நாள் விசாரணை இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இன்று அவருடன் அவரது மனைவி ரோஸ்மா மன்சோரும் உடன் வந்திருந்தார்.
முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார். கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, அரசு துணை வழக்கறிஞர் வி. சிதம்பரத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சோர் நீதிமன்றத்தை விட்டு வெளியேறினார்.
இந்த வழக்கில் ரோஸ்மாவும் ஒரு முக்கிய சாட்சியாக இருப்பதனால், இந்த வழக்கு விசாரணையின் போது அவர் இருக்கக்கூடாது என்று சிதம்பரம் தெரிவித்தார். ரோஸ்மா தமது வழக்கறிஞர் கெ. குமரேந்திரன் உடன் நீதிமன்றத்தை விட்டு வெளியேறியதாக மலேசியாகினி குறிப்பிட்டது.
ரோஸ்மாவின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் பிரச்சனைகளைத் தவிர்ப்பதற்காக அவர் நீதிமன்றத்தில் இல்லாமல் இருப்பது நல்லது என்று சிதம்பரம் நீதிமன்றத்தில் கூறினார்.