அலோர் ஸ்டார்: அலோர் ஸ்டாரில் உள்ள ஜாலான் லெஞ்சோங் தீமோரில் கடந்த புதன்கிழமை காவல் அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது இடது கையில் ஒருவர் படுகாயமடைந்தது தொடர்பில் காவல் துறை நேர்மையாக விசாரிக்கும் என்று கெடா மாநில காவல் துறை தலைவர் சைனுடின் யாகோப் கூறினார்.
இந்த சம்பவத்தில் எந்தவொரு தரப்பினரும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே காவல் துறையின் நோக்கம் என்று அவர் கூறினார். வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணையாகவும் இது அமையும் என்று சைனுடின் கூறினார்.
“ஆரம்பக்கட்ட விசாரணையில், மோடினாஸ் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், தாமான் பெலாங்கியிலுள்ள போக்குவரத்து சமிக்ஞையை மீறி சென்றதால் அப்பகுதியில் இருந்த காவல் அதிகாரிகளால் பின் தொடரப்பட்டனர். இரண்டு பேரும் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல், மேலும் சில போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி ஆபத்தான முறையில் சென்றுள்ளனர்” என்று அவர் ஓர் அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.
அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தும் நோக்கத்துடன், காவல் அதிகாரி அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக அவர் கூறினார்.
மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையாக இருக்கும் என்று கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டு, சோதனை நடத்தப்பட்ட பின்னரே, காவல் அதிகாரி சுட்டது மோட்டார் சைக்கிளில் பின் அமர்ந்து சென்றவரின் இடது கையை என்பது தெரிய வந்தது.