கோலாலம்பூர்: வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் அம்னோ கட்சியின் ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் அரசியலமைப்புச் சட்ட உட்பிரிவுகளில் திருத்தங்கள் செய்யப்படலாம் எனும் சிந்தனைக்கு அம்னோ உயர்மட்ட செயற்குழு எந்த ஒரு முடிவினையும் எடுக்கவில்லை என்று அதன் பொதுச் செயலாளர் அனுவார் மூசா தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு, இது குறித்து கட்சியின் முக்கியப் பிரிவுகள் மற்றும் அடிமட்ட உறுப்பினர்கள் வரையிலும் ஆலோசனைக் கேட்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். ஆயினும், இது உண்மையான சூழலில் நிகழுமா என்பது உறுதியாக கூற முடியாது என்று அவர் தெரிவித்தார்.
ஒரு வேளை அச்சட்டங்களில் மாற்றங்களை செய்ய கட்சி ஒப்புக் கொண்டால் தற்போதைய அம்னோ கட்சியின் தலைவரான டாக்டர் அகமட் சாஹிட் ஹமிடியின் பதவி பறிக்கப்படலாம்.
மேலும், பெக்கான் தொகுதி அம்னோ தலைவரான நஜிப்பின் பதவியும் பறிக்கப்படும் சூழல் ஏற்படலாம். விதிமுறை 9.9 மாற்றம் செய்யப்பட்டப் பிறகு, நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்ட கட்சி உறுப்பினர்கள் முக்கியமாக தலைவர்களின் பதவிகள் பறிக்கப்படும் சாத்தியம் ஏற்படும்.