கோலாலம்பூர்: பொருளாதார அமைச்சருடன் ஓரினச் சேர்க்கை காணொளியில் சம்பந்தப்பட்டதாக வாக்குமூலத்தை அளித்த சாந்துபோங் பிகேஆர் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவரை இதுநாள் வரைக்கும் தொடர்புக் கொள்ள முடியவில்லை என அவரது குடும்பத்தார் தெரிவித்ததாக மலேசியாகினி தெரிவித்துள்ளது.
இது குறித்து அவரது தகப்பனார் அப்துல் அசிஸ் குறிப்பிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஜூன் 11-ஆம் தேதியிலிருந்தே அவரை தொடர்புக் கொள்ள இயலவில்லை என ஹசிக்கின் குடும்பத்தார் குறிப்பிட்டுள்ளனர்.
ஓரினச் சேர்க்கை காணொளி வெளியானதன் தொடர்பில் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட அவமானம் காரணமாக தற்போது அவரது குடும்ப உறுப்பினர்கள் தங்களது வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, கடந்த வாரம் மூலத் தொழில் துணையமைச்சர் சம்சுல் இஸ்காண்டார் முகமட் அகினின் அந்தரங்க செயலாளர் பதவியிலிருந்து ஹசிக் நீக்கப்பட்டார். சாந்துபோங் பிகேஆர் இளைஞர் பகுதி தலைவரான ஹசிக், இது தொடர்பாக அஸ்மின் தம்மீது சட்ட நடவடிக்கையை எடுக்குமாறு சவால் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.