கோலாலம்பூர்: சங்க பதிவாளருக்கு (ஆர்ஓஎஸ்) அம்னோ கட்சி குறித்து அளிக்கப்பட்ட அறிக்கையில் தலையிடப்போவதில்லை என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசின் சுட்டிக் காட்டினார்.
1எம்டிபி சம்பந்தமான 270 மில்லியன் ரிங்கிட் பணத்தை அம்னோ கட்சி பெற்றதாகக் கூறப்படுவது குறித்து பக்காத்தான் ஹாராப்பான் இளைஞர் பகுதியினர் சங்கப் பதிவாளரிடம் புகார் அளித்தது குறித்து கேள்வி எழுப்பிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“மிக முக்கியமானது என்னவென்றால், குறிப்பிட்ட நபர்கள் வழங்கும் காரணங்கள் வலுவாக இருக்க வேண்டும்,” என்று மொகிதின் இன்று செவ்வாய்க்கிழமை புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் கூறினார்.
எம்ஏசிசியின் பறிமுதல் வழக்கு தொடர்பாக அம்னோ எதிர்த்து வாதாடும் என்று அதன் இடைக்கால தலைவர் முகமட் ஹசான் கூறியிருந்தார்.
சட்டவிரோத நிதியை பெற்ற அம்னோவின் இந்த நடவடிக்கையானது, அக்கட்சிக்கு ஒரு தீர்க்கமான தண்டனையை வழங்க ஒரு வலுவான காரணமாக அமையும் என்று பக்காத்தான் ஹாராப்பான் இளைஞர் பகுதி குறிப்பிட்டிருந்தது.