கோலாலம்பூர்: போதைப் பழக்கத்திற்கான சிகிச்சையானது தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள சிறைத் தண்டனைகளை விட மிகவும் மலிவானது மற்றும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மாஹ்சா பல்கலைக்கழக மருத்துவத் துறை தலைமை பேராசிரியர் டாக்டர் முகமட் உசேன் ஹாபில் தெரிவித்தார்.
போதைப் பொருள் மறுவாழ்வு திட்டத்தில் கலந்துகொள்ள அரசாங்கம் தற்போதைக்கு ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 3,500 ரிங்கிட் செலவழிக்கிறது.
இருப்பினும், அவர்களில் கிட்டத்தட்ட 95 விழுக்காட்டினர் மறுவாழ்வு மையத்தை விட்டு வெளியேறிய பின்னர் மீண்டும் போதை பழக்கத்திற்கு திரும்புகின்றனர் என்று அவர் கூறினார்.
“மருத்துவ சிகிச்சைக்கு மாதத்திற்கு 300 ரிங்கிட் மட்டுமே தேவைப்படுகிறது. மீண்டும் போதைக்கு அடிமையாகுவோர் வெறும் ஐந்து விழுக்காடு மட்டுமே” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
போதைப் பழக்கத்திற்கு ஆளானவர்களை இனி குற்றவாளிகளாக கவனிப்பதை விடுத்து, சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்கு ஏங்கும் நோயாளிகளாக கவனிக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் மொகிதின் யாசினின் கருத்து குறித்து வினவிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.