சென்னை: கடும் வறட்சியின் காரணமாக சென்னையின் நிலை என்னவாகுமோ என்ற நிலையில் மக்கள் அவதியுற்று வந்தனர். இதற்கிடையே, மக்களின் இந்த பெரும் கவலையைப் போக்கும் வகையில் நேற்று புதன்கிழமை சென்னையில் ஆறு மாதங்களுக்கு பின்னர் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.
மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வந்த நிலையில் கனமழை பெய்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்தால் ஓரளவு தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும் என்பதால் தொடர் மழையை மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இதற்கிடையில், ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டி காப்ரியோ சென்னையில் மழை பெய்தால் மட்டுமே அம்மாநிலத்தைக் காப்பாற்ற முடியும் என்று குறிப்பிட்டு டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டுருந்தது பரவலாக சமூகப் பக்கங்களில் பகிரப்பட்டது.
“மழையால் மட்டுமே சென்னையை காப்பாற்ற முடியும். ஒரு கிணறு முற்றிலுமாக வறண்டு இருக்கிறது. இந்தியாவின் தெற்கு நகரமான சென்னை கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. ஏரிகள் வறண்டுவிட்டன. குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் அரசு விநியோகிக்கும் தண்ணீருக்காக மணிக் கணக்கில் வரிசையில் காத்திருக்கின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டுவிட்டன. அரசு அதிகாரிகள் இந்தத் தட்டுப்பாட்டைப் போக்க மாற்று வழிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறது. சென்னையில் வசிக்கும் பொதுமக்கள் மழைக்காக சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இயற்கை மீது முகுந்த அக்கறைக் கொண்ட நடிகர்களில் லியானார்டோவும் ஒருவர். மனித இனம் மனது வைத்தால் மட்டுமே இந்த இயற்கை அழிவை மீட்க முடியும் என்ற கருத்துடன் என்றும் பயணம் செய்பவர். அவரின் நல்ல எண்ணமும் சென்னைக்கு மழை வந்ததையும் ஒரு சிலர் தற்செயலாக இயற்கை தமிழகத்திற்கு அளித்த சமிக்ஞை என்று கூறிவருகின்றனர்.