Home நாடு அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஓரிரு வாரத்தில் மித்ரா நிதி – வேதமூர்த்தி அறிவிப்பு

அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளுக்கு ஓரிரு வாரத்தில் மித்ரா நிதி – வேதமூர்த்தி அறிவிப்பு

783
0
SHARE
Ad

புத்ராஜெயா: மித்ரா சார்பில் சுமார் 40 இந்திய அரசு சாரா அமைப்புகளுக்கு முதற்கட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட மானிய நிதி, இன்னும் ஓரிரு வார காலத்தில் வழங்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார்.

புதிய அரசாங்கத்தில் முதல் கட்டமாக சுமார் 40 அரசு சாரா அமைப்புகளுக்கு அனுமதி அளித்தபடி மித்ரா அமைப்பு இன்னும் நிதி வழங்கவில்லை என்றும் அதைப்போல பாலர்பள்ளி ஆசிரியர்களுக்கும் தொகுப்பு ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என்றும் கருத்து தெரிவிக்கப்பட்டதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அமைச்சர், அதேவேளை பாலர் வகுப்பு நடத்தும் நிறுவனங்களுக்கும் மானியம் வழங்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்பாக மித்ரா அதிகாரிகள் போதிய விளக்கம் அளித்துவிட்ட போதும், ஒருசில அரசாங்க அதிகாரிகள் “குறுநில மன்னர்களைப்” போல மிதப்பான போக்குடன் நடந்து கொள்வதால் இத்தகைய தாமதம் ஏற்படுகிறது.

#TamilSchoolmychoice

“இப்படிப்பட்ட சூழ்நிலையில் கடந்த புதன்கிழமை அரசாங்க துணைத் தலைமைச் செயலாளர் டத்தோ அஸ்னுலைத் தொடர்பு கொண்டு, மித்ரா நிதி ஒதுக்கீட்டில் இப்படி தாமதம் ஏற்படுவதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொண்ட நிலையில் இன்று வியாழக்கிழமை காலையில் டத்தோ அஸ்னுல், பிரதமர் துறை சட்டப்பிரிவுத் தலைவர் டத்தோ அமாலினா உட்பட பத்து அதிகாரிகள் கொண்ட குழுவினர் புத்ராஜெயா அலுவலகத்தில் என்னைச் சந்தித்து விளக்கம் அளித்தனர்” என்றும் வேதமூர்த்தி கூறினார்.

அந்த சந்திப்பின்போதுபோது, மித்ரா தலைமை இயக்குனர் ச. லெட்சுமணன், துணை இயக்குனர் மகாலிங்கம் ஆகிய இருவரும் உடன் இருந்தனர்.

மித்ரா சம்பந்தப்பட்ட மானிய ஒதுக்கீட்டில் சிறுசிறு தடங்கலும் அதனால் தாமதமும் நிகழ்ந்ததை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள் இன்னும் ஒன்று அல்லது இரண்டு வாரங்களில் சம்பந்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளிப்பதாக உறுதி அளித்துச் சென்றனர் என்றும் தேசிய ஒற்றுமை மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான செனட்டர் பொன். வேதமூர்த்தி அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.