Home உலகம் கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிராக 337 ஓட்டங்கள் எடுத்தது இங்கிலாந்து

கிரிக்கெட் : இந்தியாவுக்கு எதிராக 337 ஓட்டங்கள் எடுத்தது இங்கிலாந்து

810
0
SHARE
Ad

பெர்மிங்ஹாம் (இங்கிலாந்து) – (மலேசிய நேரம் இரவு 9.25 நிலவரம்) உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளுக்கான வரிசையில் இன்று ஞாயிற்றுக்கிழமை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஆட்டத்தில் இங்கிலாந்து அபாரத் திறமையை வெளிப்படுத்தி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து, 337 ஓட்டங்களைக் குவித்தது.

நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது.

அடுத்து இரண்டாவது பாதி ஆட்டத்தில் விளையாடவிருக்கும் இந்தியாவுக்கு 338 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

#TamilSchoolmychoice

மிகக் கடுமையான இந்த சவாலை இந்தியா சமாளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வி காணாத வீராட் கோலி தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற்று சாதனை படைக்குமா என இந்திய கிரிக்கெட் இரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா புதிய வடிவிலான சீருடையில் விளையாடியது. கிரிக்கெட் விளையாடும் நாடுகளுக்கான சீருடை வண்ணங்களில் இங்கிலாந்தும், இந்தியாவும் இளம் நீல வண்ணத்திலான சீருடையைக் கொண்டுள்ளன.

இன்று இரண்டு நாடுகளுமே மோதுவதால், இந்திய விளையாட்டாளர்களுக்கு புதிய சீருடை வடிவமைக்கப்பட்டு அந்த சீருடையில் அவர்கள் இன்று களமிறங்கினார்கள்.

இரண்டு நாடுகளுக்குமே இன்றைய ஆட்டம் மிக முக்கியமானதாகும். 2019 உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை எந்த ஆட்டத்திலும் தோல்வியடையாத நாடாக இருக்கும் இந்தியா அந்தப் பெருமையை இங்கிலாந்தையும் தோற்கடித்துத் தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை இன்றைய  ஆட்ட முடிவுகள் காட்டும்.

இந்தியா இன்னும் விளையாட வேண்டிய 3 ஆட்டங்களில் ஒரே ஒரு புள்ளியைப் பெற்றாலே போதும் – அரையிறுதி ஆட்டத்திற்குத் தகுதி பெற்றுவிடும்.

ஆனால் இங்கிலாந்தோ இன்றைய ஆட்டத்தில் இந்தியாவை வென்றால்தான் அடுத்த கட்டத்திற்குச் செல்ல முடியும். தோல்வியடைந்தால், அரையிறுதி ஆட்டத்திற்கு இங்கிலாந்து தகுதி பெறாது. மற்ற நாடுகள் ஏதாவது மோசமான நிலையில் தோல்வியடைந்து வெளியேறினால் மட்டுமே இங்கிலாந்துக்கு அரையிறுதி ஆட்டத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

எனவே, இங்கிலாந்து தனது அத்தனை ஆற்றலையும் வெளிப்படுத்தி இந்தியாவைத் தோற்கடிக்க முயற்சி செய்யும் என்பதால் இன்றைய ஆட்டம் பரபரப்பாக எதிர்பார்க்கப்படுகிறது.