கோலாலம்பூர்: அம்னோ கட்சியை தாம் மீண்டும் வழிநடத்தப்போவதாகக் கூறிய டாக்டர் சாஹிட் ஹமீடியின் முடிவினை பலர் ஆதரித்து வரும் வேளையில், நேற்று திங்கட்கிழமை அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசானை சாஹிட் சந்தித்தார். இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தினை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார்.
“இந்த சந்திப்பின் மூலமாக எங்களுக்கு பலம், துணிச்சல், நிலைத்தன்மை மற்றும் தேசத்தின் மதத்தை நிலை நிறுத்துவதற்கான போராட்டத்தில் துணையாக நிற்க வேண்டிக்கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதனிடையே, டாக்டர் அகமட் சாஹிட் ஹமீடி அம்னோ கட்சியின் தலைவராக மீண்டும் தனது கடமைகளை தொடங்க இருப்பதாக அறிவித்த முடிவுக்கு அடிமட்ட மட்டத்தில் உள்ள அம்னோ தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆயினும், அடிமட்ட உறுப்பினர்களின் குரலுக்கு அதிக கவனம் கொண்டவராக இருக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
முன்னதாக அம்னோ தலைவர் பதவியிலிருந்து சாஹிட்டை விலகுமாறு அறிவுறுத்திய தெப்ராவ் தொகுதி அம்னோ தலைவர் மௌலிசான் பூஜாங், அவர் மீண்டும் பதவிக்கு திரும்புவதை வரவேற்றுள்ளதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
அம்னோ கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹசான் அம்னோவுக்கு எப்படி மக்களின் ஆதரவைப் பெற்றுத் தந்தாரோ, அது போலவே அவரும் இயங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
கடந்த மே 20-ஆம் தேதி, அப்போது விடுமுறையிலிருந்த அகமட் சாஹிட்டை தலைவர் பதவியிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டார். தலைவர் பதவியினை தற்காத்துக் கொள்ள பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் தனது ஆதரவாளர்களை வைத்து அப்பதவிக்கு வர முயற்சிப்பதாக அவர் கூறியிருந்தார்.
ஆறு மாதங்களுக்கும் மேலாக விடுமுறைக்கு பின்னர் அம்னோ தலைவர் பதவியை மீண்டும் தாம் ஏற்றுக் கொள்வதாக அகமட் சாஹிட் அண்மையில் அறிவித்திருந்தார்.