ஜோகூர் பாரு: பாசிர் கூடாங்கில் உள்ள 101 குழுவின் இரசாயன ஆலையுடன் தம்மை இணைத்து சமூக ஊடகங்களில் புகைப்படங்களை பரப்பியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க இருப்பதாக எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சர் இயோ பீ யின் உறுதியளித்துள்ளார்.
இயோ இந்த குற்றச்சாட்டானது அப்பகுதியில் சுகாதார பிரச்சனைகளை கையாள்வதில் ஈடுபட்டுள்ள பல்வேறு நிறுவனங்களின் நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களை அவமதிப்பதாக இருப்பதாக அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
“இந்த சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய அளவுரு வாசிப்பை எடுத்து தரவுகளை பகுப்பாய்வு செய்ய அவர்கள் இரவும் பகலும் அயராது போராடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை அரசியலாக்குவதற்கான அவர்களின் நடவடிக்கை அருவருப்பானது மற்றும் வெறுக்கத்தக்கது. இந்த சூழ்நிலையால் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோர்கள் மற்றும் குழந்தைகள் அனுபவிக்கும் உணர்வுகளையும் அதிர்ச்சியையும் ஏளனமாகப் பேசும் நடவடிக்கையாக இது உள்ளது” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
“அவதூறு பரப்பும் மற்றும் பேச்சு சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யும் இவர்களுக்கு எதிராக நான் சட்ட நடவடிக்கை எடுப்பேன்” என்று அவர் கூறினார்.
அப்புகைப்படத்தில் இயோவின் முகம் மற்றும் அவரது கணவர் லீ இயோவ் செங்கின் படமும் பதிவேற்றப்பட்டிருந்தது. இயோவின் கணவர் பாசிர் கூடாங்கில் மூன்று இரசாயன ஆலைகளைக் கொண்டிருப்பதாகக் கூறி, அதனால்தான் அரசாங்கம் மெதுவாக செயல்படுகிறது என்று அப்படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.