கொழும்பு: ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டிருந்த இலங்கை காவல் துறை தலைமை ஆணையர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இருவரும் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதாக காவல் துறை ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இலங்கை பாதுகாப்பு முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, உடல்நலக் குறைவு காரணமாக தேசிய மருத்துவமனையில் நேற்று செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹேமசிறி பெர்ணான்டோவிடம், குற்றப் புலனாய்வு அதிகாரிகள் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட நிலையில் அவரை கைது செய்ததாக ருவன் குணசேகர குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21-ஆம் திகதி தாக்குதல் சம்பவம் தொடர்பில் முன்னதாகவே தகவல் அறிந்திருந்த போதிலும், அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க தவறியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.