Home கலை உலகம் வனிதா விஜயகுமாரை பிக் பாஸ் இல்லத்தில் விசாரித்த காவல் துறை

வனிதா விஜயகுமாரை பிக் பாஸ் இல்லத்தில் விசாரித்த காவல் துறை

1277
0
SHARE
Ad

சென்னை – தொடங்கிய முதல் வாரத்திலேயே பரபரப்பான செய்திகளால் சூடுபிடித்துவிட்டது தமிழ் பிக்பாஸ் 3. கடந்த சில நாட்களாக செய்திகளில் முன்னணி வகிப்பது நடிகை வனிதாவின் குடும்ப விவகாரம்.

பிரபல நடிகர் விஜயகுமார் மறைந்த நடிகை மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா மீது அவரது முன்னாள் கணவர் ஆனந்தராஜ், தனது மகளைக் கடத்தி வைத்திருப்பதாக  ஹைதராபாத்தில் புகார் அளித்திருந்த நிலையில், மகள் யாரிடம் இருக்க விரும்புகிறாரோ அவரிடம் தான் குழந்தை ஒப்படைக்கப்படும் என்று காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தெலுங்கானா காவல் துறையினர், தமிழகக் காவல் துறையினரைத் தொடர்பு கொள்ள அவர்கள் வனிதாவை விசாரிக்க பிக்பாஸ் இல்லம் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

#TamilSchoolmychoice

அதன்படி நேற்று வியாழக்கிழமை ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் திடீரென பிக்பாஸ் வனிதாவை கொன்பெஷன்ஸ் ரூம் எனப்படும் அந்தரங்க அறைக்குள் அழைத்தார். அங்கு சென்ற வனிதாவிடம் உங்களைப் பார்க்க சில பேர் வந்திருக்கிறார்கள் நீங்கள் சென்று பார்த்து விட்டு வாருங்கள் என்று கூறினார்.

அடுத்த காட்சியில் மீண்டும் பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்த வனிதாவை மற்ற பங்கேற்பாளர்கள் சூழ்ந்து கொண்டு என்ன நடந்தது எனக் கேட்டனர். அதற்கு பதிலளித்த வனிதா “எல்லாம் நன்மைக்குத்தான். என்னை விசாரித்த காவல் துறையினர் மகள் யாரிடம் இருக்க விரும்புகிறாரோ அவரிடமே ஒப்படைப்போம் என்று கூறினர். அதன்படி என்மகள் என்னிடம் இருப்பேன் என்று கூறிவிட்டாள். எனவே தற்போது அதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன” என்று கூறினார்.

இதனையடுத்து வனிதா பிக்பாஸ் வீட்டிலேயே தொடர்வாரா அல்லது மகளைக் கவனிக்க பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவாரா என்ற ஆரூடங்கள் சமூக ஊடகங்களில் பரபரப்புடன் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

இதற்கிடையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 -வது பங்கேற்பாளராக பங்கு பெற்றுள்ள விளம்பர மாடலான மீரா மீது காவல் துறை புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும் அதன் காரணமாக காவல் துறை அவரைத் தேடி வருவதாகவும் வதந்திகள் உலவி வருகின்றன.

இதன் காரணமாக அதிரடியாக காவல் துறை பிக்பாஸ் இல்லத்திற்குள் நுழைந்து மீராவை விசாரிக்குமா அல்லது கைது செய்யுமா என்பது போன்ற ஆரூடங்கள் சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகின்றன.