சென்னை: அண்மையில் நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதனிடையே, வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. அமமுக இம்முறை போட்டி களத்தில் இறங்காது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அமமுகவை கட்சியாக பதிவு செய்து, நிலையான ஒரு சின்னம் கிடைத்த பின்னரே தேர்தலில் போட்டியிட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து நாங்குநேரி உள்பட இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு தேர்தலுக்கும், ஒவ்வொரு சின்னத்தில் போட்டியிடுவது சிக்கலாக இருக்கலாம். எனவே கட்சியை பதிவு செய்து நிலையான சின்னம் கிடைத்த பின்னரே தேர்தலில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.