மலாக்கா: கடந்த 2016-ஆம் ஆண்டில் தேசிய நீல பெருங்கடல் திட்டத்தின் (என்பிஓஸ்) கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியில் முறைக்கேடு நடந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் நேற்று திங்கட்கிழமை மலாக்காவின் அம்னோ கட்சியைச் சார்ந்த சுங்கை ரம்பாய் சட்டமன்ற உறுப்பினரும் அவரது பணியாளரும் ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர்.
318,400 ரிங்கிட் நிதியை தவறாகப் பயன்படுத்தியக் குற்றத்திற்காக இவர்கள் இருவர் மீதும் 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. ஆயினும், அக்குற்றங்களை மறுத்து அவர் விசாரணைக் கோரினர்.
குற்றம் சாட்டப்பட்ட டத்தோ ஹாசன் அப்துல் ரஹ்மான் (57) மற்றும் அவரது அலுவலக பணியாளர் குசைமா அப்துல்லா (34) ஆகியோர் மீது 34 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கடந்த 2016-ஆம் ஆண்டு என்பிஓஎஸ் கீழ் சோள பயிரிடல் திட்டம், வாழை மற்றும் காய்கறிகள் திட்டம், மாற்று மிளகாய் மற்றும் மான் வளர்ப்புத் திட்டத்திற்காக வழங்கப்பட வேண்டிய 34 காசோலைகள் சம்பந்தப்பட்டவர்களூக்கு சென்று சேராதது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் 2018-ஆம் ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி வரையிலும் ஜாசினில் அமைந்துள்ள சுங்கைரம்பாய் ஆர்டிசி அலுவலகத்தில் இக்குற்றங்களைஇவ்விருவரும் செய்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவருக்கும் தண்டனைச் சட்டம் பிரிவு 406-இன் கீழும், குசைமாவுக்கு கூடுதலாக தண்டனைச் சட்டம் பிரிவு 109 கீழ் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி மற்றும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கு வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.