ஹாங்காங்: ஹாங்காங்கில் நடைபெற்று வரும் ஜனநாயகத்திற்கு ஆதரவான போராட்டக்காரர்களுக்கு பிரிட்டன் ஆதரவளித்து வருகிறது.
போராட்டக்காரர்களின் வன்முறையை கண்டித்த பிரிட்டனின் வெளியுறவு அமைச்சர் ஜெர்மி ஹண்ட், அவர்களை ஒடுக்க சீனா வன்முறையை பயன்படுத்துமானால், அது கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறியுள்ளார். ஹாங்காங்கின் சுயாட்சிக்கு சீனா மதிப்பளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.
குற்றவாளிகளை சீனாவிடமும், மக்கௌவிடமும் ஒப்படைக்கும் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் பெருங்கூட்டமாக ஒன்றாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த மசோதா சீனாவுக்கு ஆதரவான ஹாங்காங் தலைமை நிருவாகியாக செயல்பட்டு வரும் கேரி லெமால் அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட வரைவாகும். சீனாவில் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள மக்களை சீனாவிடம் ஒப்படைப்பதை இது எளிதாக்கிவிடும் என்று கூறப்படுகிறது. இது நடந்து விட்டால் ஹாங்காங்கின் சுயாட்சிக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்றும் மக்கள் கூறி வருகின்றனர்.
மேலும், அரசியல் காரணங்களுக்காக இந்த சட்டத்தை சீனா பயன்படுத்தலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். மக்கள் பெரிய அளவில் போராடியதைத் தொடர்ந்து, இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டது. ஆயினும், அது கைவிடப்படவில்லை.
இதனை ஒட்டி ஹண்ட் தெரிவித்த கருத்துக்களால் பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனுக்கான சீன தூதர் லியு சியாவ்மிங் கூறியுள்ளார். பிரிட்டன் இரட்டை வேடத்தோடு செயல்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.