கோலாலம்பூர் – நம்பிக்கைக் கூட்டணி ஆட்சி பீடத்தில் அமர்ந்த கடந்த ஓராண்டில் மலேசியா உலக அரங்கில் பல்வேறு நிலைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை அடைந்துள்ளதோடு, வணிக வாய்ப்புகள், முதலீடுகள், ஊழல் ஒழிப்பு, சந்தை வாய்ப்புகள் என பல முனைகளிலும் அனைத்துலக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதன் பிரதிபலிப்புகள் வெளிச்சத்துக்கும் வரத் தொடங்கியுள்ளன. சிஇஓ வோர்ல்ட் (CEO World) என்ற அனைத்துலக சஞ்சிகை முதலீடுகளுக்காக உலகில் சிறந்த நாடுகள் எனப் பட்டியலிட்டுள்ள 67 நாடுகளில் மலேசியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற முன்னணி நாடுகளைக் கூட பின்னுக்குத் தள்ளி மலேசியா முன்னேறியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை ஐரோப்பிய நாடான போலந்து பிடித்துள்ளது.
சிங்கப்பூர் 6-வது இடத்தையும், இந்தியா 7-வது இடத்தையும் இந்தப் பட்டியலில் பிடித்துள்ளன.
மலேசியாவின் அண்டை நாடான தாய்லாந்து 10-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.