Home கலை உலகம் கோலிவுட்: விலங்குகள் பக்கம் மீண்டும் திரும்பும் திரைப்படங்கள்!

கோலிவுட்: விலங்குகள் பக்கம் மீண்டும் திரும்பும் திரைப்படங்கள்!

2154
0
SHARE
Ad

கோலாலம்பூர் – இந்த வாரம் வெளியாகியிருக்கும் இரண்டு தமிழ்ப் படங்கள் ‘கூர்கா’ மற்றும் ‘கொரில்லா’. இந்த இரண்டு படங்களிலுமே யோகிபாபு நடித்திருக்கின்றார் என்பதைத் தவிர, மற்றொரு ஒற்றுமையும் இந்த இரண்டு படங்களுக்கும் உண்டு. கூர்காவில் ஒரு நாய் மையக் கதாபாத்திரம் என்றால், கொரில்லா படத்தில் ஒரு குரங்குதான் முக்கியக் கதாபாத்திரம்.

ஒரு காலத்தில் எல்லாப் படங்களிலும் விலங்குகள் நடிப்பது, பல படங்களில் விலங்குகளே முக்கியக் கதாபாத்திரங்கள் என்றிருந்த நிலைமை அண்மைய ஆண்டுகளில் மாறியது. விலங்குகளை நடிக்க வைத்தால், அதற்கென சட்டவிதிகள், பிட்டா என்ற விலங்குகள் நல வாரியத்தின் சான்றிதழ் என பல கெடுபிடிகள் உருவாகியதால் விலங்குகள் தமிழ்ப் படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவது கூட அபூர்வமாகிப் போனது.

அப்படியே தோன்ற வேண்டிய அவசியம் இருந்தாலும், கைவசம் இருக்கவே இருக்கின்றன தொழில்நுட்ப வசதிகள். எந்த விலங்கு வேண்டுமோ அதனை அப்படியே இரத்தமும் சதையுமாக திரையில் கொண்டு வந்து விஎஃப்எக்ஸ் (VFX-Visual Effects) மூலம் காட்டினர் தொழில்நுட்பவாதிகள்.

#TamilSchoolmychoice

அண்மையில் வெளிவந்த கும்கி படத்திலும், மேலும் சில படங்களிலும் இதுபோன்ற காட்சிகள் இடம் பெற்றன.

ஆனால், தமிழ்ப் படங்களின் கடந்த கால வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் விலங்குகளோடு பின்னிப் பிணைந்து தமிழ்ப் படங்கள் பயணம் நடத்தியது தெரிய வரும்.

தமிழ்ப் படங்களும் விலங்குகளும்…

1950-களில் வெளிவந்த தமிழ்ப் படங்கள் சிலவற்றில், விலங்குகள் நடிப்பதும், விலங்குகளை மையமாக வைத்து படம் எடுப்பதும் ஒரு கலாச்சாரமாகவே உருவெடுத்தது. குலேபகாவலி படத்தில் எம்ஜிஆர் புலியுடன் சண்டைப் போடுவது படத்தின் சுவரொட்டிகளில் பிரதானமாக இடம் பெற்றது.

தனது படங்களில் தனது வீரத்தைக் காட்ட காட்டு விலங்குகளுடன் போராடுவது என்பதை வழக்கமாக்கிக் கொண்டார் எம்ஜிஆர். குலேபகாவலியில் புலியுடன் சண்டை, தாய்க்குப் பின் தாரம் படத்தில் காளை மாட்டை அடக்குவது, பறக்கும் பாவை படத்தில் ஒரு நாற்காலியைக் கொண்டு புலியை விரட்டுவது, எல்லாவற்றிலும் உச்சமாக அடிமைப் பெண்ணில் சிங்கத்துடன் சண்டை என காட்சிகளை தனது படத்தில் அமைத்துக் கொண்டார் எம்ஜிஆர்.

சாண்டோ சின்னப்பா தேவரின் வருகை தமிழ் சினிமாக்களில் விலங்குகளின் வருகையைப் பன்மடங்கு பெருக்கியது. ஒவ்வொரு படத்திலும் ஒரு விலங்கை – அதிலும் குறிப்பாக காட்டு விலங்கை – மையமாக வைத்து பல படங்கள் தயாரித்து வெற்றி பெற்றார் சின்னப்பா தேவர். தனது முதல் படமாக தாய்க்குப் பின் தாரத்தில் ஒரு காளையை மையக் கதாபாத்திரமாக்கியவர், தாயைக் காத்த தனயனின் ஒரு சிறுத்தைப் புலியை முக்கியக் கதாபாத்திரமாக்கினார்.

தாய்க்குப் பின் தாரம் படத்தின் வெற்றியால் அதன் பிறகு அவர் அவரது ‘தேவர் பிலிம்ஸ்’ படத்தின் சின்னத்திலேயே ஒரு காளை இடம் பெற்றது.

ஜெய்சங்கர் நடித்த நேர்வழி படத்தில் ஒரு குதிரையையும், நாயையும் வைத்தே கதையை உருவாக்கினார் சின்னப்பா தேவர். அவரது படத்துக்கென கதைகளை எழுத – உருவாக்க, சில திரைக்கதை எழுத்தாளர்களை இணைத்து, ‘தேவர் கதை இலாகா’ என உருவாக்கியவர் அவர். அவரது படங்களில் எல்லாம் கதை ‘தேவர் கதை இலாகா’ என்றே வரும்.

விலங்குகளை வைத்து படம் எடுப்பதில் உச்சத்திற்கே போனவர் சின்னப்பா தேவர். அதிலும் அந்தப் படங்கள் வரலாறு காணாத வசூலைப் பெற்றவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

வேட்டைக்காரன், யானைப்பாகன் போன்றவையும் தேவர் தயாரிப்பில் வெற்றி பெற்ற படங்கள்.

தெய்வச் செயல் தோல்வியால் வீறு கொண்டெழுந்த சின்னப்பா தேவர்…

தெய்வச் செயல் படத்தில் எல்லா விலங்குகளையும் ஒருசேர அணிவகுத்து படம் எடுத்த தேவர் அந்தப் படத்தின் தோல்வியால் மனம் உடைந்து போகாமல், அதன் பிறகு கூடுதல் வீரியத்துடன், ஒவ்வொரு விலங்குக்கும் ஒரு படம் என எடுத்துத் தள்ளி வசூல் சாதனை புரிந்தார்.

“ஒவ்வொரு முறை அவரைப் பார்க்கும் போது இப்போது என்ன படம் எடுக்கிறீர்கள் என்று கேட்டால், தெய்வச் செயல் படத்தை மீண்டும் எடுத்துக் கொண்டிருக்கிறேன் என்பார் சின்னப்பா தேவர்” என கமல்ஹாசன் ஒருமுறை கூறினார்.

தெய்வச் செயல் படத்தின் தோல்விக்குப் பிறகுதான் விலங்குகளை வைத்துப் படம் எடுத்து உச்சத்துக்குப் போனார் தேவர். கோடிக்கணக்கான வசூல்களை அந்தப் படங்கள் வாரிக் குவித்தன.

நமது பினாங்கு மாநிலத்தில் சுமார் 6 மாதங்கள் இடைவிடாது ஓடிய சாதனையைப் படைத்தது ஹாத்தி மேரே சாத்தி

இந்திக்குப் போய் அன்றைய உச்ச நட்சத்திரம் ராஜேஷ் கண்ணாவை வைத்து யானைகளோடு ஹாத்தி மேரா சாத்தி எடுத்தவர், பின்னர் அதையே எம்ஜிஆரை வைத்து ‘நல்ல நேரம்’ என எடுத்தார். ரஜினியை வைத்து – ஒரு யானைக்குட்டியின் அட்டகாசங்களை இணைத்து, ‘அன்னை ஓர் ஆலயம்’ எடுத்தார். அப்போதைய முன்னணி நடிகைகள் ஸ்ரீபிரியாவை வைத்து ‘ஆட்டுக்கார அலமேலு’, பிரமிளாவையும் பசுமாட்டையும் வைத்து ‘கோமாதா என் குலமாதா’, ஜெயசித்ராவையும் பாம்பையும் வைத்து ‘வெள்ளிக்கிழமை விரதம்’ என வரிசையாக எடுத்த தேவர் அனைத்தையும் வசூல் படங்களாக உருவாக்கினார்.

தேவருக்குப் பிறகு இராம.நாராயணன்…

தேவருக்குப் பிறகு விலங்குகளுக்கு தமிழ்ப் படங்களில் மறுவாழ்வு கொடுத்தவர் இராம.நாராயணன். அவரும் குரங்கு, நாய், பாம்பு என விலங்குகளை மையமாக வைத்து பல படங்களை உருவாக்கினார்.

காலப்போக்கில், விலங்குகள் நல வாரியத்தின் தலையீட்டினால் வேண்டாம் வம்பு என விலங்குகளை நடிக்க வைப்பதில் இருந்து தயாரிப்பாளர்கள் ஒதுங்கிக் கொண்டனர்.

ஓரிரு படங்கள் மட்டுமே அவ்வப்போது விலங்குகளோடு வெளிவந்தன. சிபிராஜ் நடிப்பில் ‘நாய்கள் ஜாக்கிரதை’, விக்ரம் பிரபு நடிப்பில் யானைகள் பற்றிய “கும்கி”, என சில படங்கள் வந்தன. இவற்றிலும் நிறைய விஷூவர் எபெக்ட்ஸ் காட்சிகள் இடம் பெற்றன.

இந்த சூழலில்தான், இந்தவாரம் வெளியாகியிருக்கும் – கூர்கா, கொரில்லா – இரண்டு படங்களிலும் விலங்குகள் முக்கியக் கதாபாத்திரங்களில் இடம் பெற்றிருப்பது, ஒரு புதிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான கதைகளை, சம்பவங்களை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தமிழ்ப்பட இயக்குநர்கள், புதிய கதைக் களங்களுக்காக விலங்குகள் பக்கம் தற்போது திரும்பியிருக்கிறார்கள் என்பதுபோல் தோன்றுகிறது.

-இரா.முத்தரசன்

அடுத்து: திரைவிமர்சனம் – “கொரில்லா” படம் எப்படி இருக்கிறது?