இலண்டன் – ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 14) இரவு இங்கு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்தைத் தோற்கடித்து உலகக் கிண்ணத்தை இங்கிலாந்து வெற்றி கொண்டது.
நாணயத்தைச் சுண்டிப் போட்டதில் வெற்றி பெற்ற நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்ய முடிவெடுத்தது. 50 ஓவர்கள் முடிவடைந்தபோது 8 விக்கெட்டுகளை இழந்த நியூசிலாந்து 241 ஓட்டங்களை எடுத்தது.
இரண்டாவது பாதி ஆட்டத்தில் 242 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து 10 விக்கெட்டுகளை இழந்து சரியாக 241 ஓட்டங்களை எடுத்த நிலையில், இரண்டு குழுக்களுமே சரிசம ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தன.
இந்நிலையில் வெற்றியாளரைத் தேர்வு செய்ய சூப்பர் ஓவர் என்ற கூடுதலாக ஒரு ஓவர் இரு குழுக்களுக்கும் வழங்கப்பட்டது.
முதலில் ஒரு ஓவருக்கு நியூசிலாந்து பந்து வீச இங்கிலாந்து பேட்டிங் செய்தது. முதல் ஓவருக்கான 6 பந்துகளில் விக்கெட்டை இழக்காமல் இங்கிலாந்து 15 ஓட்டங்கள் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்தது.
அடுத்த சூப்பர் ஓவருக்கான பந்து வீச்சை இங்கிலாந்து தொடங்க நியூசிலாந்து பேட்டிங் செய்தது. 6 பந்துகளில் 16 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்குடன் நியூசிலாந்து சூப்பர் ஓவரில் பேட்டிங் செய்தது.
5 பந்து வீச்சுகளில் 14 ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்து ஒரு பந்து எஞ்சிய நிலையில் 2 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டது. அப்போது இரண்டு ஓட்டங்கள் எடுக்கும் முயற்சியில் நியூசிலாந்து ‘ரன் அவுட்’ ஆகியது.
கிரிக்கெட் தோன்றியதே இங்கிலாந்தில்தான் என்றாலும் இதுவரையில் இங்கிலாந்து உலகக் கிண்ணத்தை வெற்றி பெற்றதில்லை.
இந்த வெற்றியின் வழி உலகக் கிண்ணத்தை முதன் முறையாக கரங்களில் ஏந்துகிறது இங்கிலாந்து.
இதுபோன்ற பரபரப்பான இறுதி ஆட்டம் இதுவரையில் உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடப்பட்டதில்லை எனக் கூறும் அளவுக்கு இந்த இறுதி ஆட்டம் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் அமைந்திருந்தது என்பதே விமர்சகர்களின் பார்வையாக இருந்தது.