
வேல்ஸ்: அண்மையில் கிரிக்கெட் உலகக் கோப்பையை இழந்த நியூசிலாந்து இரண்டாவது பெரிய அடியை சந்தித்துள்ளது. இந்த முறை வேல்ஸின் கைகளில்.
தென் தீவு நகரமான டுனெடினில் (Dunedin) உள்ள பால்ட்வின் தெரு (Baldwin Street) பல ஆண்டுகளாக உலகின் செங்குத்தான தெரு என்று அறியப்பட்டு வந்தது.
ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பல தீவிர பந்தயங்களுக்கான இடமாக இது பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் இங்கு பெரியளவில் வருவது குறிப்பிடத்தக்கது. 350 மீட்டர் கொண்ட இவ்வீதியின் சாய்வானது 35 விழுக்காடாகும்.
ஆனால், வெல்ஸ் கடலோர நகரமான ஹார்லெக் (Harlech) இம்முறை கிரீடத்தை எடுத்துள்ளது. அப்பகுதியில் உள்ள ஃபோர்டு பென் லெச் (Ffordd Pen Llech) தெரு அதிகாரப்பூர்வமாக 37 விழுக்காடு சாய்வு கொண்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழில்முனைவோர் மற்றும் கட்டடக்கலை வரலாற்றாசிரியர் க்வின் ஹெட்லி தலைமையில் குடியிருப்பாளர்களுடன் நடத்திய பிரச்சாரத்திற்குப் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கைத்தடை (ஹேண்ட்பிரேக்) முழுமையாக பூட்டப்பட்டிருந்த போதும், தனது கார் கீழே இறங்குகிறதென்றால், அத்தெரு உலக சாதனையைப் படைக்க போதுமானதாக இருக்குமா என்று அவர் முதலில் யோசித்து பிறகு இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இப்பதிவுக்குத் தகுதி பெற, ஒரு தெரு அதனுடன் கூடிய கட்டிடங்களுடன் முழுமையாக நடைபாதை அமைக்கப்பட்டிருக்க வேண்டும். 10 மீட்டர் அளவு பகுதிக்கு மேல் உயர்ந்த சாய்வு அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது.