கோலாலம்பூர்: தமது முந்தைய நிருவாகத்தின் போது பொருட்கள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் மீதான கொள்ளை குற்றச்சாட்டுகள் தொடர்பாக நேற்று திங்கட்கிழமை தேசிய பொது கணக்காய்வாளர் குழு (பிஏசி) தாக்கல் செய்த அறிக்கை தம்மை ஆதரிக்கும் வகையில் இருந்தது மன நிறைவயளிப்பதாக நஜிப் தெரிவித்தார்.
பிரதமராக பதவி வகித்த அந்நேரத்தில் ஜிஎஸ்டி வரி வசூலைக் கையாள்வதில் முறைகேடுகள் நிகழ்ந்திருப்பது முற்றிலும் சாத்தியமற்றது என்று அந்த அறிக்கை சுட்டிக் காட்டியதை அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
நஜிப்பின் கீழ் உள்ள தேசிய முன்னணி அரசாங்கம் திருப்பி செலுத்த இருந்த ஜிஎஸ்டி வரி பணத்தை கொள்ளையடித்தது என்று கடந்த ஆண்டு ஆகஸ்டில் நிதியமைச்சர் லிம் குவாங் எங் கூறிய குற்றச்சாட்டை பிஏசி விசாரித்தது.
கடந்த 2018-ஆம் ஆண்டு மே 31-ஆம் தேதி நிலவரப்படி திருப்பிச் செலுத்த வேண்டிய ஜிஎஸ்டி தொகை 19.4 பில்லியன் ரிங்கிட்டாக கணக்கிடப்பட்டிருந்த நிலையில், ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தும் அறக்கட்டளை நிதியில் 150 மில்லியன் ரிங்கிட் மட்டுமே இருந்துள்ளது.
பிஏசியின் அறிக்கையின்படி ஜிஎஸ்டி பணம் இழக்கப்படவில்லை என்றும், ஆனால் ஜிஎஸ்டி திருப்பிச் செலுத்தும் நிதியில் சேர்க்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தது. அதற்கு பதிலாக இது நேரடியாக ஒருங்கிணைந்த மத்திய அரசின் வருவாய் கணக்கில் சேர்க்கப்பட்டது. பிறகு அங்கிருந்து பிற செலவுகளுக்கு அப்பணம் பயன்படுத்தப்பட்டுள்ளது.