Home உலகம் பிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்

பிரிட்டனின் எண்ணெய் கப்பலை ஈரான் சிறைப்பிடித்தது – மோதல் வெடிக்கும் அபாயம்

1211
0
SHARE
Ad
ஹோர்முஸ் நீரிணையைக் காட்டும் வரைபடம்

டெஹ்ரான் – பிரிட்டனின் கொடியை ஏந்திய எண்ணெய் கப்பல் ஒன்றை ஈரானின் இராணுவத் துருப்புகள் சிறைப் பிடித்திருப்பதைத் தொடர்ந்து அனைத்துலக அரங்கில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. ஸ்டெனா இம்பெரோ (Stena Impero) என்ற பெயர் கொண்ட அந்த எண்ணெய் கப்பல் ஹோர்முஸ் (Hormuz) நீரிணையில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, ‘அனைத்துலக விதிகளை மீறியதற்காக’ இன்று சனிக்கிழமை (ஜூலை 20) சிறைப்பிடிக்கப்பட்டதாக ஈரான் அறிவித்திருக்கிறது.

நேற்று வெள்ளிக்கிழமையன்றும் இதே போன்று இன்னொரு கப்பல் தடுத்து நிறுத்தப்பட்டாலும் பின்னர் தொடர்ந்து பயணத்தை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டது.

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதா இல்லையா என்பது குறித்து தாங்கள் இன்னும் முடிவு செய்யவில்லை என பிரிட்டன் அறிவித்தது.

#TamilSchoolmychoice

பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளும் இந்த விவகாரத்தில் பிரிட்டனுக்கு ஆதரவாகத் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தன.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பகைமை அண்மைய வாரங்களில் அதிகரித்திருப்பதைத் தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையில் பதட்டம் அதிகரித்து வருகிறது.

ஹோர்முஸ் நீரிணை என்பது மத்திய கிழக்கு நாடுகள் தங்களின் எண்ணெய் வளங்களைக் கடல் மூலமாக உலகின் மற்ற நாடுகளுக்குக் கொண்டு செல்ல உதவும் ஒரே கடல் வழிப் பாதையாகும்.

பெர்சியன் வளைகுடா மற்றும் ஓமான் வளைகுடா இரண்டையும் இணைக்கும் இந்தக் குறுகிய நீரிணை சுமார் 21 மைல்கள் மட்டுமே அகலம் கொண்ட கடல் பகுதியாகும். பெர்சியன் வளைகுடாவைச் சுற்றியிருக்கும் எண்ணெய் வள நாடுகள் தங்களின் ஏற்றுமதிகளை இந்தக் கடல்பகுதியாகவே உலக நாடுகளுக்கு அனுப்பி வருகின்றன. எனினும் இந்தக் கடல்பகுதி ஈரானின் கடல் எல்லைக்குள் இருப்பதால் ஈரான், தனது ஆதிக்கத்தையும், வலிமையையும் காட்ட இந்தப் பகுதியில் செல்லும் கப்பல்களை தடுத்து நிறுத்தி வருகிறது.