Home நாடு பி-40 திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு 1022 பேர் விண்ணப்பம்

பி-40 திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு 1022 பேர் விண்ணப்பம்

858
0
SHARE
Ad
குலசேகரன் – குணசேகரன்

கோலாலம்பூர் – கடந்த ஜூலை 3-ஆம் தேதி, மனிதவள அமைச்சர் எம்.குலசேகரனால் தொடக்கி வைக்கப்பட்ட வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகத்தின் பி-40 திறன் மேம்பாட்டு திட்டத்திற்கு இளைஞர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறுகிறார் வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகத்தின் துணைத்தலைவர் குணசேகரன் கந்தசுவாமி.

ஜூலை 3 தொடங்கி கடந்த 14 ஜூலை வரை மேற்கொள்ளப்பட்ட பதிவு நடவடிக்கையில் இதுவரை 1022 இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது திறன்பயிற்சிகள் மீதான இளையோரின் பார்வை மாறி வருவதைக் காட்டுவதாகவும் குணசேகரன் குறிப்பிட்டார்.

நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உருவாக்கித் தரும் மிகச் சிறந்த வாய்ப்பாக தொழில்திறன் பயிற்சிகள் திகழ்வதால் அதில் பெருமளவிலான இளையோர் பயன்பெற வேண்டும் என்ற நோக்கில் அமைச்சர் குலசேகரன் அவர்களால் இந்த பி-40 திறன் மேம்பாட்டு திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் இளையோர் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் TVET எனப்படும் தொழில்திறன் கல்வி குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட வேண்டும் என இத்திட்டத்தை தொடக்கி வைத்தபோது எம். குலசேகரன் வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

அந்த வகையில், மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவள மேம்பாட்டு நிதி (HRDF) -இன் ஆதரவில் தேசிய வேலையிட பாதுகாப்பு, சுகாதார கழகத்தின் (NIOSH) B40 திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகளில் அதிகமாக இளையோர் பங்கெடுக்க ஆர்வம் காட்டிருப்பதன் வழி இளையோர் உருமாற்றத்திற்கு ஒரு புதிய பாதையினை உருவாக்கி தந்துள்ளது எனவும் குணசேகரன் குறிப்பிட்டார்.

தொடக்கக் கட்டமாக 100 பேர் இத்திட்டத்தின் வழி திறன் மேம்பாடு அடைவதற்கான வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் குணசேகரன். விண்ணப்பித்த தகுதி வாய்ந்த மாணவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டு பின் அவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 4 பிரிவாக நடத்தப்படும் பயிற்சிகளின் இணைத்துக் கொள்ளப்படுவர். இப்போது கட்டங் கட்டமாக நேர்முகத் தேர்வுகள் நடைப்பெற்று கொண்டிருப்பதால் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படும் இளைஞர்கள் வாய்ப்பினைச் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மிக அதிகமாக இளையோர் இப்பயிற்சிகளுக்கு விண்ணப்பித்திருப்பதால் எதிர்காலத்தில் இவ்வாறான திட்டங்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு அதிகமானவர்களுக்குப் பயிற்சியளிக்கப்படும் சாத்தியம் குறித்தும் ஆராயப்பட்டு வருவதாக குணசேகரன் குறிப்பிட்டார்.

இவ்வேளையில், இளையோருக்கு இப்பயிற்சி திட்டம் குறித்த தகவலைக் கொண்டு சேர்த்த i25 அரசு சாரா அமைப்புகளின் கூட்டமைப்புக்கும், தமிழ் நாளிதழ்கள், மின்னல் எம்.எம் வானொலி, வானொலி செய்திப்பிரிவு, தொலைக்காட்சி 2 செய்திப்பிரிவு, மற்றும் இணைய ஊடகங்களுக்கும் குணசேகரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

சமூகத்தின் கூட்டு முயற்சி உருமாற்றத்திற்கு அடித்தளமிடும் தூண்டுகோலாக மாற்றம் காணும் எனவும் அவர் இவ்வேளையில் குறிப்பிட்டார்.