Home Video “முஸ்லீம் அல்லாதவர்களுக்கு 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு. இந்தியர்களுக்கு 1 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு” –...

“முஸ்லீம் அல்லாதவர்களுக்கு 10 மில்லியன் நிதி ஒதுக்கீடு. இந்தியர்களுக்கு 1 மில்லியன் சிறப்பு ஒதுக்கீடு” – நேர்காணலில் சிவநேசன் (பகுதி 3)

1034
0
SHARE
Ad

(நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்புகளில் உள்ளவர்கள் என சிலரை நேர்காணலின் வழி சந்தித்து அவர்களின் கடந்த காலப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள், சந்தித்து வரும் சவால்கள் குறித்து செல்லியல் சார்பாக உரையாடினோம். அந்த வகையில் பேராக் மாநில ஆட்சிக் குழு உறுப்பினரும், சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான அ.சிவநேசனைச் சந்தித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய நேர்காணலின் மூன்றாவது பகுதி)

பேராக் மாநிலத்தின் ஆட்சிக் குழு உறுப்பினராகப் பதவியேற்றது முதல் தான் தனிப்பட்ட கவனம் செலுத்தி வரும் தமிழ்ப் பள்ளிகள், மற்றும் தனது முயற்சியால் இன்று வளர்ச்சி பெற்றிருக்கும் கல்வித் தோட்டம் அறவாரியம் ஆகிய விவகாரங்களைத் தொடர்ந்து பேராக் மாநிலத்தில் பொதுவாக இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள், அவற்றைத் தீர்க்கத் தான் எடுத்து வரும் முயற்சிகள் குறித்து செல்லியல் நேர்காணலில் தொடர்ந்து விவரித்தார் சிவநேசன்.

“பேராக் மாநிலத்திற்கான முஸ்லீம் அல்லாதார் விவகாரத்திற்கு ஆட்சிக் குழு பொறுப்பாளராக இருப்பவர் துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பால் லியோங் ஆவார். எனினும் நமது இந்து ஆலயங்கள், அவற்றுக்கான நிலங்கள் சம்பந்தப்பட்ட விவகாரங்களில் நான் தொடர்ந்து கவனம் செலுத்தி, ஆட்சிக் குழுவில் அவை குறித்து எழுப்பி வருகின்றேன். இந்திய சமூகத்திற்காக தனியாக சிறப்பு நிதி 1 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2018-ஆம் ஆண்டில் 1.25 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டது. இந்த ஆண்டு மேலும் 1 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நமது தேவைகள் கருதி இன்னும் கூடுதல் நிதி வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறேன்” என்ற சிவநேசன் முஸ்லீம் அல்லாதார் நலன்களுக்காக பேராக் மாநில அரசாங்கம் 10 மில்லியன் சிறப்பு நிதியை ஒதுக்கியிருக்கிறது என்பதையும் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி நடைபெற்ற பேராக் மாநில தமிழ்ப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள், பள்ளி நிர்வாகப் பிரதிநிதிகள் கூட்டத்தில் சிவநேசன் உரையாற்றுகிறார்…
#TamilSchoolmychoice

இந்த 10 மில்லியன் நிதியில் 5 மில்லியன் முஸ்லீம் அல்லாதாரின் நடவடிக்கைகளுக்காகவும், எஞ்சிய 5 மில்லியன் சீரமைப்புப் பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படும். “இந்த 5 மில்லியன் ரிங்கிட் நிதி விநியோகத்திலும் நான் கவனம் செலுத்தி இந்து ஆலயங்களுக்கான மானியங்கள் வழங்கப்படுவதையும் உறுதி செய்து வருகின்றேன்” என்று கூறிய சிவநேசன், நமது இந்து ஆலயங்களின் சீரமைப்புப் பணிகளுக்குத்தான் – கும்பாபிஷேகம் போன்ற பணிகளுக்காக – அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பிரிவுக்கும் பொறுப்பேற்றுள்ளதால், முதன் முறையாக தொழிலாளர்களின் சுகாதார நலன்களுக்காக 5 இலட்சம் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு தனது முயற்சியால் மாநிலத்திலிருந்து பெற்றுள்ளதாகவும், வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற ஒதுக்கீடு இல்லை என்றும் சுட்டிக் காட்டினார்.

இந்த வருடம் இந்த நிதி ஒதுக்கீட்டை ஒரு மில்லியனாக உயர்த்த கோரிக்கை விடுத்திருப்பதாகவும் தொழிலாளர்களின் சுகாதார நலன்கள், அவர்களுக்கான விழிப்புணர்வு ஆகியவற்றுக்காக இந்த நிதி செலவிடப்படும் என்றும் தெரிவித்தார்.

கம்பார் கோழிப்பண்ணை

“கம்பாரில் கோழிப் பண்ணை வைத்திருக்கும் நமது இந்தியர் ஒருவர் மிகச் சிறப்பாக அந்த வணிகத்தில் ஈடுபட்டு வந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக அவருக்கான மாற்று நிலமும் அரசாங்க உதவியும் கிடைக்காமல் இருந்தது. தற்போது தனது முயற்சியால் நவீன கோழிப் பண்ணைக்கு அவர் மாறவிருக்கிறார். அதற்காக ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அதற்கான 5 மில்லியன் ரிங்கிட் செலவினத்தையும் அவரே ஏற்றுக் கொண்டு செயல்பட முன்வந்திருக்கிறார்” எனப் பெருமிதத்துடன் சிவநேசன் குறிப்பிட்டார்.

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்புத் துறைக்கும் பொறுப்பாளராகத் தான் இருப்பதால், வேலைவாய்ப்புகளைத் தேடி மக்கள் அரசாங்கத்தை அணுகும் நிலைமையை மாற்றியமைத்து தற்போது அரசாங்கமே வேலைவாய்ப்புகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்க்கும் சூழலை உருவாக்கியிருப்பதாகக் கூறும் சிவநேசன் மாநிலத்திலுள்ள 15 மாவட்டங்களிலும் “வேலைவாய்ப்பு திருவிழா”க்களை (Carnival) ஒவ்வொரு வட்டாரத்திலும் அரசாங்கத்திலும், தனியார் நிறுவனங்களிலும் என்ன மாதிரியான வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்பதை, மனித வள அமைச்சு, வேலைவாய்ப்பு நிறுவனமான ஜோப் ஸ்ட்ரீட் ஆகியவற்றுடன் இணைந்து மக்களுக்கு விளக்கிக் காட்டியுள்ளதாகக் கூறினார்.

எங்கெங்கே வேலைவாய்ப்புகள் இருக்கின்றன என்பதோடு நில்லாமல், ஒரு வேலைக்கு எப்படி விண்ணப்பம் செய்வது, வேலை தேடுபவர் தனது சொந்த விவரங்களை எவ்வாறு ஒரு விண்ணப்பத்தில் முறையாக இணைப்பது போன்ற பயிற்சிகளையும் இந்த வேலைவாய்ப்பு திருவிழாக்கள் வழங்கியுள்ளன. இதன் மூலம் நூற்றுக்கணக்கானோர் பயனடைந்தனர், பலருக்கு வேலைகள் கிடைத்தன என்கிறார் சிவநேசன்.

தமிழ்ப் பள்ளிகளைத் தரம் உயர்த்துவோம்

தனது சட்டமன்றத் தொகுதியிலும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளதாகப் பட்டியலிடும் சிவநேசன் நேர்காணலின் முடிவில், தனது மனதுக்கு நெருக்கமான தமிழ்ப் பள்ளிகளின் விவகாரத்திற்கு வந்தார்.

“இப்போதெல்லாம் தமிழ்ப் பள்ளிகளுக்கு நேரடியாகவே மானியங்கள் வழங்கப்படுகின்றன. ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு 3 மில்லியன் ரிங்கிட் அவரது தொகுதியின் மேம்பாட்டுக்காக நிதி ஒதுக்கப்படுகிறது. இதிலிருந்தும் தமிழ்ப் பள்ளிகள் பயன்பெறுகின்றன. தமிழ்ப் பள்ளி மாணவர்களின் தரமும் தேர்ச்சியும் என்னை வியக்க வைக்கிறது. தேசிய அளவிலான பள்ளிகளில் 5 பாடங்கள் கொண்ட யுபிஎஸ்ஆர் தேர்வில் தேர்ச்சி விகிதம் 65 விழுக்காடுதான். ஆனால் 7 பாடங்கள் எடுக்கும் தமிழ்ப் பள்ளி மாணவர்களின் யுபிஎஸ்ஆர் தேர்ச்சி விழுக்காடு 68 விழுக்காடாகும். இதைத் தவிர தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மும்மொழிகளையும், அழகாக, அருமையாகப் பேசுகிறார்கள். தேசிய அளவிலும், அனைத்துலக அளவிலும் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்று வருகிறார்கள். தமிழ்ப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் பலர் பல்கலைக் கழகப் பட்டதாரிகளாக உயர்ந்திருக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது, தமிழ்ப் பள்ளிகளில் படித்தால் சோறு கிடைக்குமா, பயன் கிடைக்குமா என்று கேட்பவர்களை ஓங்கி அறையலாம் போலத் தோன்றுகின்றது” என்ற சிவநேசன் மேலும் தொடர்ந்தார்.

“ஆரம்பப் பள்ளிகளில் பயிலத் தொடங்கும் இந்திய மாணவர்களில் சுமார் 65 விழுக்காட்டினர் தமிழ்ப் பள்ளிகளையே தேர்வு செய்கின்றனர். எஞ்சியவர்களில் சுமார் 5 முதல் 8 விழுக்காட்டினர் சீனப்பள்ளிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஒரு 10 விழுக்காட்டினர் எப்போதுமே தமிழ்ப் பள்ளிகளுக்கு தங்களின் பிள்ளைகளை அனுப்பப் போவதில்லை. மற்றவர்கள் தமிழ்ப் பள்ளிகள் அருகாமையில் இல்லை போன்ற காரணங்களால் அனுப்புவதில்லை.  எனினும் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்புவர்களில் பெரும்பாலோர் இன்னும் பி-40 எனப்படும் அடித்தட்டு பிரிவினர்களாக இருக்கின்றனர். தமிழ்ப் பள்ளிகளுக்கு மாணவர்களை அனுப்புவதில் அனைவரும் ஆர்வம் காட்டினால், குறைந்த மாணவர்களைக் கொண்ட பள்ளிகளை இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களுக்கு இடம் மாற்றினால், தமிழ்ப் பள்ளிகள் இல்லாத இடங்களில் புதிய பள்ளிகளை உருவாக்கினால், காலப் போக்கில் தமிழ்ப் பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கையும் உயரும், தரமும் உயரும். இந்த கோணத்தில்தால் நான் பேராக்கில் தொடர்ந்து பாடுபட்டு வருகிறேன். உதாரணத்திற்கு லங்காப் வட்டாரத்தில் கடந்த 15 ஆண்டுகளாக ஒரு தமிழ்ப் பள்ளியை நிறுவ போராடி வருகிறார்கள். அவர்களுக்கு என்னாலான உதவிகளை செய்து வருகிறேன்” என தனது நேர்காணலை நிறைவு செய்தார் சிவநேசன்.

சிவநேசன் தனது மூன்று பிள்ளைகளையும் தமிழ்ப் பள்ளிகளுக்கு அனுப்பி இன்றைக்கு அவர்களை தொழில்துறை நிபுணத்துவ பட்டதாரிகளாக உருவாக்கியிருக்கிறார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்புடைய நேர்காணல்களின் முந்தைய பகுதிகள்:

“அரசாங்கத் தமிழ்ப் பள்ளிகளுக்கு சொந்த நிலம் கிடைக்க போராடுகிறேன்” செல்லியல் நேர்காணலில் சிவநேசன் (பகுதி 1)

“2 ஆயிரம் ஏக்கர் கல்வித் தோட்டம் – எதற்காக எனது போராட்டம்?” – விளக்குகிறார் சிவநேசன் (பகுதி 2)

அ.சிவநேசன் நேர்காணலின் காணொளி வடிவம்

அ.சிவநேசன் வழங்கிய செல்லியல் நேர்காணலின் ஒரு பகுதியை காணொளி வடிவமாக கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: