கோலாலம்பூர் – முஸ்லீமாக மதம் மாற்றம் கண்ட தனது முன்னாள் கணவர் பத்மநாபன் என்ற முகமட் ரிடுவான் அப்துல்லா, தனது மகள் பிரசன்னாவை மறைத்து வைக்கவும், தலைமறைவு வாழ்க்கை வாழவும், சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகிர் நாயக்கின் ஆதரவாளர்களும் பாஸ் கட்சியின் ஆதரவு குழுக்களும் பாதுகாப்பையும், பண உதவியையும் செய்து வருகின்றன என இந்திரா காந்தியின் தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
மேலும், தென் தாய்லாந்தில் இயங்கிவரும் பிரிவினை வாத தீவிரவாதக் குழுக்களும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர் என இந்திரா காந்தியின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ‘இங்காட்’ (Ingat) என்ற இயக்கத்தின் சார்பில் அருண் துரைசாமி பெட்டாலிங் ஜெயாவிலுள்ள மலேசிய இந்து சங்கத் தலைமையகத்தில் நடத்தப்பட்ட பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இத்தகைய பண உதவிகள் மூலம், முகமட் ரிடுவான் அப்துல்லா அண்மையில் புதிய ரக மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்கியிருக்கிறார் என்றும் அருண் துரைசாமி குறிப்பிட்டார்.
இந்திரா காந்தி நடவடிக்கைக் குழு (Indira Gandhi Action Team –Ingat) என்ற பெயரில் இந்த நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்பில் பெட்டாலிங் ஜெயா காவல் நிலையத்தில் புகார் ஒன்றையும் இந்திரா காந்தி செய்திருப்பதாக அருண் துரைசாமி தெரிவித்தார். பொதுமக்களிடம் இருந்து கிடைத்த தகவல்களில் அடிப்படையில் தாங்கள் இந்தப் புகாரைச் செய்திருப்பதாகவும், காவல் துறையினர் தங்களின் புலனாய்வு விசாரணைகளை இதனை அடிப்படையாக வைத்து நடத்த வேண்டும் என்றும் அருண் கேட்டுக் கொண்டார்.
முகமட் ரிடுவான் அப்துல்லா தற்போது காவல் துறையினரால் தேடப்பட்டு வருகிறார்.