சென்னை – இயக்குநர் ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம்தான் என்றாலும், அவரது படங்களில் கதாநாயகனாக இணைபவர் யார் என்பது இரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இன்னொரு அம்சம். அந்த வகையில் அடுத்து கமல்ஹாசனை வைத்து இந்தியன்-2 எடுக்கப் போவதாக அறிவித்தார் ஷங்கர்.
இரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறினாலும் அந்தப் படம் ஏனோ தற்போதைக்குக் கைவிடப்பட்டுள்ளது. ஷங்கரின் அடுத்த படம் என்ன, யார் அவரோடு இணையப் போகிறார் என்ற கேள்விகளுக்கு விடையாக நடிகர் விக்ரம் அண்மையில் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஷங்கரும் – விஜய்யும் இணைகிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டிருக்கிறார்.
இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை இல்லையென்றாலும், எப்போதும் பகிரங்கமாக தனது நட்புகளை வெளிக்காட்டாத விஜய்யின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான விக்ரம் மூலம் வெளிவந்திருப்பதால் இந்தத் தகவலை நம்பலாம்.
ஏற்கனவே, ‘நண்பன்’ படத்தின் மூலம் ஷங்கரும் விஜய்யும் இணைந்து அந்தப் படமும் மாபெரும் வெற்றி பெற்றது.
அடுத்தடுத்து விஜய் படங்கள் வசூலை வாரிக்குவித்து, இப்போது ஷங்கரின் பிரம்மாண்டத்திற்கு இணையாக 100 கோடிக்கு மேல் வசூலித்து வருகின்றன.
இதன் காரணமாக ஷங்கரின் அடுத்த படத்தில் விஜய் இணைவது தமிழ்த் திரையுலகை இன்னொரு பிரம்மாண்டத்திற்குக் கொண்டு செல்லும் என காத்துக் கிடக்கிறது தமிழ் திரையுலகம்.