பெங்களூரு – திங்கட்கிழமை ஜூலை 29-ஆம் தேதி கூடவிருக்கும் கர்நாடக மாநில சட்டமன்றக் கூட்டத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கப் போவதாகக் கூறியிருக்கும் பாஜக தலைவரும் புதிய முதல்வருமான எடியூரப்பாவுக்கு எதிர்பாராத ஒரு தரப்பிலிருந்து ஆதரவு கிடைக்கலாம் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதுவரையில் கர்நாடக முதல்வராக இருந்த மதச் சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு ஆட்சி நடத்தி வந்தார். தற்போது காங்கிரஸ் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் மோசமான தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இனி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் மத்தியில் பாஜக ஆட்சிதான் தொடரப் போகிறது என்ற நிலையில் பதவியிழந்த குமாரசாமி கர்நாடக மாநில அரசியலில் இனி பாஜகவுக்கு ஆதரவு அளிக்கக் கூடும் எனத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
திங்கட்கிழமை இது உண்மையானால், எடியூரப்பாவின் ஆட்சி தொடர்வதில் சிக்கல் ஏதும் இருக்காது. அதே வேளையில் குமாரசாமியின் மதச் சார்பற்ற ஜனதா தளம் வெளியிலிருந்து பாஜக ஆட்சிக்கு ஆதரவு தருமா அல்லது ஆட்சியில் இணைந்து சில அமைச்சர்களைப் பெற்றுக் கொள்ளுமா என்பதும் திங்கட்கிழமை தெரிந்து விடும்.