Home வணிகம்/தொழில் நுட்பம் உலகின் விலையுயர்ந்த கட்டிடத் தொகுதி எது தெரியுமா?

உலகின் விலையுயர்ந்த கட்டிடத் தொகுதி எது தெரியுமா?

822
0
SHARE
Ad

குப்பர்ட்டினோ – உலகம் எங்கும் பல விலையுயர்ந்த நிலங்களில் மிகுந்த மதிப்புடைய கட்டிடங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் மிக அதிக மதிப்புடைய கட்டிடம் எது?

அண்மையில் வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி அமெரிக்காவின் தொழில்நுட்ப மையமான சிலிக்கோன் பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் குப்பர்ட்டினோ நகரில் பிரம்மாண்டமாக எழுப்பப்பட்டிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் கட்டிடத் தொகுதியின் மதிப்பு 3.6 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. மலேசிய ரிங்கிட் மதிப்பில் இது சுமார் 14.80 பில்லியன் ரிங்கிட்டாகும். கட்டிடங்கள் மீதான வரிக்காக சந்தா கிளாரா கவுண்டி நகரமன்றத்தின் சந்தை மதிப்பீட்டின்படி இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

2017-இல் திறக்கப்பட்ட இந்தக் கட்டிடத் தொகுதிக்கான விலை நிர்ணயம் வரிக்காக நிர்ணயிக்கப்பட்டதே தவிர, உண்மையான சந்தை விலை அல்ல. விற்பனை என்று வந்தால், இதைவிட மிக அதிகமாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமையகம் விற்பனைக்குப் போகும் எனக் கணிக்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேலும் இந்தக் கட்டிடத் தொகுதியின் உள்வேலைப்பாடுகள், அங்கிருக்கும் கணினிகள், தளவாடப் பொருட்கள், மற்ற கருவிகள், சுற்றுச் சூழலுக்காக அமைக்கப்பட்டிருக்கும் மரங்கள், தாவரங்கள் ஆகியவற்றின் மதிப்பையும் சேர்த்தால், ஆப்பிள் தலைமையகக் கட்டிடத்தின் மதிப்பு 4.17 பில்லியன் அமெரிக்க டாலராக (மலேசிய ரிங்கிட் 17.15 பில்லியன்) இருக்கும்.

2.8 மில்லியன் சதுர அடி கொண்ட நிலப்பரப்பில் ஆப்பிள் கட்டிடம் அமைந்திருக்கிறது.

4 மாடிக் கட்டிடங்களை மட்டுமே கொண்ட ஆப்பிள் தலைமையகக் கட்டிடம் உலகின் அதிக மதிப்புடைய முதல் 12 கட்டிடங்களில் ஒன்றாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.

எனினும் மற்ற சிலக் கட்டிடங்கள் ஆப்பிள் கட்டிடத்தை விட விலையுயர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. சிங்கப்பூரின் மரினா பே சேண்ட்ஸ் ரிசோர்ட் 5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்டது என்றும் சவுதி அரேபியாவின் புனித மெக்கா நகரில் அமைந்துள்ள அப்ராஜ் அல் பையிட் டவர்ஸ் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடையது என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக அரேபியாவின் புனித நகர் மெக்காவில் அமைந்துள்ள பிரம்மாண்டமான புனித பள்ளிவாசல் கட்டிடத் தொகுதி சுமார் 100 பில்லியன் டாலர் மதிப்பைக் கொண்டதாகும்.

இதற்கிடையில் தனது கட்டிடத் தொகுதிக்காக ஆப்பிள் செலுத்திய ஆண்டு வரி எவ்வளவு தெரியுமா?

40 மில்லியன் அமெரிக்க டாலர்!