சுங்கை பட்டாணி: கடந்த செவ்வாய்க்கிழமை இங்குள்ள சுல்தான் அப்துல் ஹாலீம் மருத்துவமனையில் சுங்கை பட்டாணி சிறைச்சாலையில் உள்ள ஒரு கைதி மரணமுற்றது தொடர்பான விசாரணையை கெடா மாநில சிறைத் துறை முழுமையாக காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக அதன் தலைவர் முகமட் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
சிறைச்சாலை கொள்கையை உள்ளடக்கியிருப்பதால், இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.
மருத்துவமனையில் இறந்த அக்கைதியின் மரணத்தில் எந்தவொரு குற்றவியல் கூறுகளும் இல்லை என்று நேற்று புதன்கிழமை காவல் துறை தெரிவித்திருந்தது.
கோல முடா மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி அட்ஸ்லி அபு ஷா கூறுகையில், சுல்தானா பாஹியா மருத்துவமனை பிரேத பரிசோதனையில், ஆர்.கோபால் கிருஷ்ணன் (வயது 21) என்பவரின் இருதயத்தில் கிருமிகள் தொற்று காரணமாக உயிர் இழந்ததாக குறிப்பிடப்பட்டிருந்ததாக கூறினார்.
காவலில் இருந்த போது கோபால் கிருஷ்ணன் தாக்கப்பட்டதாகக் கூறி அவரது வருங்கால மனைவி காவல் துறையில் புகார் அளித்துள்ள போதிலும், இது திடீர் மரணம் என்று காவல் துறை வகைப்படுத்தியுள்ளனர்.