Home One Line P0 “ஆட்சிக் குழு உறுப்பினராக சாதனைகள் என்ன?” பட்டியலிடுகிறார் கணபதி ராவ் (நேர்காணல் பகுதி 2)

“ஆட்சிக் குழு உறுப்பினராக சாதனைகள் என்ன?” பட்டியலிடுகிறார் கணபதி ராவ் (நேர்காணல் பகுதி 2)

1103
0
SHARE
Ad

ஷா ஆலாம் – (நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்புகளில் உள்ளவர்கள் என சிலரை நேர்காணலின் வழி சந்தித்து அவர்களின் கடந்த காலப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள், சந்தித்து வரும் சவால்கள் குறித்து செல்லியல் சார்பாக உரையாடினோம். அந்த வரிசையில் கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான வி.கணபதி ராவைச் சந்தித்து சந்தித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய நேர்காணலின் இரண்டாவது நிறைவுப் பகுதி)

மனித உரிமைகளுக்கான போராட்டங்கள், உண்மையான சமூக உணர்வோடு, மக்கள் நலன்களுக்காக பாடுபடுவது ஆகியவையே தனது நோக்கமாக இருந்ததாகவும் எந்தக் காலத்திலும் அரசியல், அரசாங்கப் பதவிகள் தனது கனவுகளாக இருந்ததில்லை என்று கூறும் கணபதி ராவ், அத்தகை அரசாங்கப் பதவி தன் தோள்களில் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து அதையும் ஒரு கடமையாக ஏற்று தனது பணிகளைச் செய்து வருவதாகக் கூறுகிறார்.

ஆலய நிகழ்ச்சி ஒன்றில் கணபதி ராவ்

“2013 முதல் சட்டமன்றம், ஆட்சிக் குழு பதவிகளை வகித்தாலும், நினைத்த அளவுக்கு மக்களுக்கு செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்கு நிறைய இருக்கிறது. சிறுபான்மை மக்களின் உரிமைக்காக பேசினால், இனவாதியாகவும், சமயத்தைப் பற்றிப் பேசினால், தற்காத்தால், அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கிறார் என்றும் பெயர் வாங்கிக் கொடுக்கும் மலேசியா. இத்தகைய பின்னடைவுகளுக்குக் காரணம் அரசாங்கக் கொள்கைகள் என்பதையும் நான் மறுக்கவில்லை” என ஆதங்கப்படும் கணபதி ராவ், மக்கள் பணிகளில் தனக்கு பல சமயங்களில் சோர்வும், ஏமாற்றமும் ஏற்படும்போதெல்லாம், உற்சாகமூட்டி, ஆலோசனைகள் வழங்கி சரியான பாதையில் கொண்டு செல்வது நாடாளுமன்ற உறுப்பினரும், தற்போது அமைச்சராகவும் இருக்கும் தெரசா கோக்தான் என நன்றியுடன் கூறிக் கொள்கிறார்.

தமிழ்ப் பள்ளிகளுக்கு நிலம்

#TamilSchoolmychoice

தனது பதவிக் காலத்தில் 17 தமிழ்ப் பள்ளிகளுக்கான நிலம் அவர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்திருப்பதாகக் கூறும் கணபதி ராவ் தொடர்ந்து 140 ஆலயங்களுக்கான நிலங்கள் அந்த ஆலயங்களுக்கே உரிமையாக்கப்பட்டு, அரசாங்கப் பதிவேட்டில் (கெசட்) இடம் பெற வழிவகைகள் செய்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்.

குறிப்பாக சுங்கை ரெங்கம் தமிழ்ப் பள்ளிக்கான நிலத்தைப் போராடிப் பெற்றதை நினைவு கூரும் கணபதி ராவ், தொடர்ந்து தோட்டப்புறத் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்துக்காக கட்டணம் பெற்றுத் தந்தது, 100 பல்கலைக் கழக மாணவர்களுக்கு தலா ஐயாயிரம் ரிங்கிட் நிதி உதவி, தோட்டப்புறத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்குப் பள்ளிக் கட்டணங்கள் உதவித் தொகை ஆகியவற்றையும் தனது பணிகளில் முக்கியமானதாகக் குறிப்பிடுகிறார்.

மேலும் 2014 முதல் யுபிஎஸ்ஆர் தேர்வுகளில் சிறந்த முறையில் 6ஏ, 7ஏ, 8ஏ எடுக்கும் மாணவர்களுக்கு சாதனையாளர்கள் விருதுகளை வழங்கி வந்திருப்பதையும் தமிழ்ப் பள்ளி ஆசிரியர்களுக்காக ‘தோக்கோ குரு’ விருதுகளையும், சிறந்த தமிழ்ப் பள்ளிகளைத் தேர்ந்தெடுத்துப் பரிசளிப்பதையும் தான் செய்து வரும் பணிகளில் தனது மனத்துக்குப் பிடித்தவை என்கிறார் கணபதி ராவ் .

தும்போக் தோட்ட மக்களுக்கு நிலங்கள்

“முன்பு மைக்கா ஹோல்டிங்சால் நிர்வகிக்கப்பட்ட தும்போக் தோட்டத்தில் வசித்த தொழிலாளர்களுக்கும் நிலங்கள் பெற்றுத் தரப்பட்டிருக்கின்றன. புக்கிட் ராஜா தோட்டத் தொழிலாளர்களுக்கும் எனது முயற்சியால் செத்தியா ஆலாம் மேம்பாட்டு நிறுவனத்தால் 75 வீடுகள் வழங்கப்பட்டன. டனுடின் தோட்டத் தொழிலாளர்களுக்கும் 22 வீடுகள் இலவசமாகப் பெற்றுத் தரப்பபட்டன” என்று பட்டியலிடும் கணபதி ராவ், இவை தவிர கிறிஸ்துவ தேவாலயங்கள், ஆலயங்களுக்கும் தொடர்ந்து நிலங்கள் பெற்றுத் தரப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மாநில அளவில் தீபாவளி பொது உபசரிப்பு நடத்துவது, பொங்கல், தைப்பூசம் போன்ற பெருநாட்களை அரசாங்க நிலையில் கொண்டாடுவது போன்ற முயற்சிகளையும் தனது பதவிக் காலத்தில் எடுத்திருப்பதாகக் கூறுகிறார் கணபதி ராவ்.

டொமினியன் தோட்டத் தொழிலாளர்களுக்கு 50 ஆயிரம் ரிங்கிட் நஷ்ட ஈடு, திரௌபதி அம்மன் ஆலயத்திற்கு 1.6 ஏக்கர் நிலம் பெற்றுத் தந்தது, பெட்டாலிங் ஜெயா காசிங் சிவன் ஆலயத்திற்கு 1 ஏக்கர் நிலம் ஒதுக்கியது, புத்ரா ஜெயா உருவாக்கத்தின்போது பாதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்காக  டிங்கில் தாமான் பெர்மாத்தா வீடமைப்புத் திட்டத்திற்கு 391 வீடுகள் பெற்றிருப்பது போன்றவையும் இந்திய சமூகத்திற்கான தனது பணிகளில் அடங்கும் என பெருமிதம் கொள்கிறார் கணபதி ராவ்.

எவ்வளவுதான் செய்ய முற்பட்டாலும், தான் எதிர்நோக்கும் அரசியல் ரீதியான தாக்குதல்கள், ஆதாரமின்றி மக்கள் முன் வைக்கும் ஊழல் குற்றச்சாட்டுகள் தன்னை வேதனைப் படுத்துவதாகவும் கூறுகிறார் கணபதி ராவ்.

“எவ்வளவுதான் செய்தாலும் இன்னும் செய்யவில்லை எனக் குறை கூறுகிறார்கள். அப்படியே செய்த காரியங்களிலும் குறைகள் கண்டுபிடித்து குற்றம் சாட்டுகிறார்கள். எவ்வளவுதான் வெளிப்படைத் தன்மையுடன் செயலாற்றினாலும், ஊழல் நடந்திருப்பதாக ஆதாரமின்றி புகார் கூறுகிறார்கள். இவையெல்லாம் மனதுக்கு கஷ்டத்தை ஏற்படுத்தினாலும், இவையும் அரசியலில் ஒரு பகுதிதான் என ஏற்றுக் கொண்டு எனது பயணத்தைத் தொடர்கிறேன். இன்னொன்றையும் மக்களும் ஊடகங்களும் கவனிக்க வேண்டும். கடந்த தேசிய முன்னணி அரசாங்கத்தால் செய்யப்படாத, செய்யத் தவறிய பல விவகாரங்களை நாங்கள் நம்பிக்கைக் கூட்டணி மூலம் தீர்த்து வருகிறோம். நாங்கள் 2008 முதல் மூன்று தவணைகளாக சிலாங்கூரை ஆட்சி நடத்தினாலும், முதல் இரண்டு தவணைகளில் தேசிய முன்னணி அரசாங்கம் மத்தியிலும் ஆட்சியில் இருந்த காரணத்தால், எங்களால் அதிகமான மாற்றங்களைக் கொண்டு வர முடியவில்லை. பல முட்டுக் கட்டைகளைச் சந்தித்தோம். ஆனால், கடந்த 2018 முதல்தான் மத்தியிலும் நம்பிக்கைக் கூட்டணி அமைந்தது. அதன் காரணமாக, இப்போதைக்கு பல திட்டங்களை மக்களுக்காக எங்களால் முன்னெடுக்க முடிகிறது. எனது பதவிக் காலம் முடிவதற்குள் சிலாங்கூர் இந்திய மக்களுக்காக மேலும் பல நல்ல திட்டங்களைக் கொண்டு வருவதோடு, இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் பல விவகாரங்களுக்கும் தீர்வு காண முயற்சி செய்வேன்” என்ற நம்பிக்கையுடன் நேர்காணலை நிறைவு செய்கிறார் கணபதி ராவ்.

தொடர்புடைய முந்தைய நேர்காணலில் பகுதி 1:

கணபதி ராவ் நேர்காணல் : தொடக்கத்தில் தோட்ட வாழ்க்கை, 495 நாட்கள் சிறைவாசம் – இப்போதோ ஆட்சிக் குழு உறுப்பினர் (பகுதி 1)

காணொளி வடிவம்:

சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் கணபதி ராவ் வழங்கிய நேர்காணலின் காணொளி வடிவத்தை கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: