Home One Line P0 கணபதி ராவ் நேர்காணல் : தொடக்கத்தில் தோட்ட வாழ்க்கை, 495 நாட்கள் சிறைவாசம் – இப்போதோ...

கணபதி ராவ் நேர்காணல் : தொடக்கத்தில் தோட்ட வாழ்க்கை, 495 நாட்கள் சிறைவாசம் – இப்போதோ ஆட்சிக் குழு உறுப்பினர் (பகுதி 1)

1493
0
SHARE
Ad

ஷா ஆலாம் – (நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்து இரண்டாம் ஆண்டில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் இந்தத் தருணத்தில், அந்தக் கூட்டணியைச் சேர்ந்த சில சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சுப் பொறுப்புகளில் உள்ளவர்கள் என சிலரை நேர்காணலின் வழி சந்தித்து அவர்களின் கடந்த காலப் பணிகள், எதிர்காலத் திட்டங்கள், சந்தித்து வரும் சவால்கள் குறித்து செல்லியல் சார்பாக உரையாடினோம். அந்த வரிசையில் கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினரும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான வி.கணபதி ராவைச் சந்தித்து சந்தித்து செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன் நடத்திய நேர்காணல்)

2013-ஆம் ஆண்டு முதல் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக இருந்து வரும் வி.கணபதி ராவுக்கு இது இரண்டாவது தவணை. தெலுக் இந்தானின் கண்டா தோட்டப் பின்னணியில் பிறந்து வளர்ந்து, தமிழ்ப் பள்ளியில் படித்து, சாதாரண குடும்பத்திலிருந்து வந்த கணபதி ராவின் வாழ்க்கை அதிரடித் திருப்பங்களைக் கொண்டது.

செல்லியலுடனான அவரது முதல் நேர்காணல் என்பதால், அவரது ஆரம்ப கால அரசியல் வாழ்க்கையைத் தெரிந்து கொள்ள விரும்பினோம். கூறத் தொடங்கினார்.

#TamilSchoolmychoice

கணபதி ராவின் போராட்ட குணமும், மனமும் தந்தையிடம் இருந்து பெற்றவை. ஆம்! அவரது தந்தை வீரமன் ஒரு தொழிற்சங்கவாதி. எதிர்க்கட்சிகளுக்கு ஆதரவு தரும் அரசியல் ஈடுபாடு கொண்டவர். ஜசெகவில் உறுப்பினராகவும் இருந்தவர்.

எஸ்பிஎம் தேர்வில் நல்ல தேர்ச்சி பெற்றாலும் தனது படிப்பைத் தொடர முடியாத நிலைமையில் இருந்த கணபதி ராவ், வழக்கறிஞர் வி.டி.சிங்கத்தின் கீழ் பணிபுரிந்தார். பகுதி நேரத்தில் படித்துக் கொண்டே வழக்கறிஞரானவர், ஷா ஆலாம் வட்டாரத்தில் தனது வழக்கறிஞர் அலுவலகத்தைத் திறந்தார்.

இடையில் தந்தையின் அரசியல் பாதையையே தேர்ந்தெடுத்த கணபதி ராவ், ஜசெக தலைவர்களில் ஒருவரான குலசேகரன் வழங்கிய ஊக்கத்தினால், ஜசெகவில் தீவிர ஈடுபாடு காட்டத் தொடங்கினார்.  2005-இல் ஜசெகவில் ஆயுட் கால உறுப்பினரானார்.

இயல்பாகவே சமூகப் போராட்டங்களிலும், சமய நலன்களிலும் ஈடுபாடு கொண்டிருந்த கணபதி ராவ் பின்னர் ஆலய உடைப்புகள் காரணமாக உருவான ஹிண்ட்ராப் போராட்டங்களில் 2006 முதல் பங்கு கொள்ளத் தொடங்கியது அவரது வாழ்க்கைத் தடத்தையே புரட்டிப் போட்டது.

ஆம்! ஹிண்ட்ராப் போராட்டம் காரணமாக உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவாசம் கண்ட ஐவரில் ஒருவர் கணபதி ராவ். ஹிண்ட்ராப் போராட்டத்திற்கு முன்பாக பெர்சே போராட்டங்கள் உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கு பெற்றது – அதன் காரணமாக, 7 முறை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது – தடுப்புக் காவலில் வைக்கப்பட்டது – போன்ற அனுபவங்களைப் பெற்றிருந்தாலும், ஹிண்ட்ராப் போராட்டத்தினால் தைப்பிங் கமுந்திங் சிறைச்சாலையில் 495 நாட்கள்  சிறைவாசக் கொடுமையை அனுபவித்து மலேசிய இந்திய சமூக வரலாற்றின் பக்கங்களிலும் இடம் பெற்றார் கணபதி ராவ்.

எனினும், அந்த சிறைவாசம்தான் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் அவருக்கு அடையாளத்தைத் தேடித் தந்தது. 2013 பொதுத் தேர்தலில் ஜசெக சார்பில் கோத்தா அலாம் ஷா சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பையும் அவருக்குப் பெற்றுத் தந்தது.

சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்டபோது….

2013 பொதுத் தேர்தலில் அந்தத் தொகுதியில் வென்ற அவர் தொடர்ந்து மாநில ஆட்சிக் குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார். அடுத்து வந்த 2018 பொதுத் தேர்தலில் கோத்தா கமுனிங் சட்டமன்றத் தொகுதிக்கு மாற்றம் கண்ட கணபதி ராவ் அங்கேயும் வெற்றி பெற தொடர்ந்து இரண்டாவது தவணைக்கும் ஆட்சிக் குழு உறுப்பினராக நியமனம் கண்டார்.

தெலுக் இந்தானில் தொடங்கிய கணபதி ராவின் பயணத்தில் அந்த வட்டாரத்திலேயே போட்டியிட்டு வரவேண்டும் என்ற எண்ணமும் ஆர்வமும் அவருக்கு இருந்தாலும், காலம் அவரை ஷா ஆலாம் கூட்டி வந்து சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினராகவும், இன்றைக்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் உருமாற்றியிருக்கிறது.

அடுத்து:

“ஆட்சிக் குழு உறுப்பினராக சாதித்தவை என்ன?” பட்டியலிடுகிறார் கணபதி ராவ் (நேர்காணல் பகுதி 2) 

கணபதி ராவ் செல்லியல் நேர்காணலின் காணொளி வடிவம்: